மோசமான ஆட்சியைக் கைவிடாவிட்டால் ராஜபக்ச அரசை வீட்டுக்கு அனுப்புவோம்! – சுமந்திரன் எம்.பி. எச்சரிக்கை.
“ராஜபக்ச அரசு, மோசமான ஆட்சி முறைமையைக் கைவிடாவிட்டால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கும்.”
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தற்போதைய அரசானது மக்கள் மீது அடக்குமுறைகளை, வன்முறைகளைப் பிரயோகித்து மக்களை அடக்கி ஆள நினைக்கின்றது. குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்குப் பாடுபடுகின்றது.
இந்த அரசு எதிர்காலத்திலாவது சரியான முறையில் செயற்படாவிட்டால் அரசை வீட்டுக்கு அனுப்பும் செயற்பாட்டில் நாங்கள் ஏனைய எதிர்க் கட்சிகளுடன் இணைந்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
ராஜபக்ச அரசானது கடும் போக்கைக் கைவிட்டு அடக்குமுறையை விட்டு குடும்ப ஆட்சி முறைமையையும் கைவிட்டு செயற்பட வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளினுடைய பங்களிப்போடு அது எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும்.
தற்போதுள்ள கொரோனா நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசால் எந்தவிதமான தகுந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. பயணத் தடை என்கின்றார்கள், பயணக் கட்டுப்பாடு என்கின்றார்கள், முடக்கம் என்கின்றார்கள், ஊரடங்கு என்கின்றார்கள். ஆனால், ஒழுங்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை.
சுகாதார அமைச்சுக்குள்ள அதிகாரத்தை வேறு யாராவது பாவிக்கின்றார்களா? அல்லது வேறு என்ன நடைபெறுகின்றது? ஒன்றுமே எமக்குப் புரியவில்லை.
எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் யாராவது ஒருவர் பொறுப்புக்கூற முன்வர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தங்களின் பதவிகளைக்கூட இராஜிநாமா செய்யலாம்” – என்றார்.