50 குழந்தைகளை தத்தெடுத்த மும்பை பெண் காவலர்…!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர், 50 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களது கல்விச்செலவையும் ஏற்றிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ரெஹானா ஷேக் காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ராய்காட் மாவட்டம் வாஜே பகுதியில், அடிப்படை வசதியில்லாமல் பள்ளிக்குழந்தைகள் தவிப்பதை நண்பர் ஒருவர் மூலம் அறிந்தார். ஏழைக்குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிரமப்படுவதை அறிந்து வேதனை அடைந்தார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குழந்தைகளை பராமரிக்கும் விதமாக, யானி வித்யாலயா பள்ளியில் படிக்கும் 50 குழந்தைகளை ரெஹானா தத்தெடுத்துள்ளார். குழந்தைகள் 10ம் வகுப்பு படிக்கும் வரை, அவர்களது கல்விச் செலவை தாமே ஏற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றால் மகாராஷ்டிரா மாநிலம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், தாம் தத்தெடுத்த குழந்தைகளுக்கு முகக்கவசம், கையுறை, ஊட்டச்சத்து மருந்துகள் ஆகியவற்றையும் ரெஹானா வழங்கி வருகிறார்.
இதுமட்டுமின்றி கொரோனா தொற்றாளர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் ரெஹானா. தேவைப்படுவோருக்கு ரத்தம் மற்றும் பிளாஸ்மா ஏற்பாடு செய்வதுடன், மருத்துவமனைகளில் படுக்கை வசதி கிடைக்கவும் உதவி செய்கிறார்.
பிற காவலர்களுக்கு முன் உதாரணமாக திகழும் காவலர் ரெஹனாவின் சேவையை பாராட்டி மும்பை காவல்துறை அவருக்கு நற்சான்று அளித்து கவுரவித்துள்ளது.