பஸ் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்குமாறு வேண்டுகோள்!
எரிபொருள் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணங்களைக் குறைந்தது 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, குறுந்தூர பஸ் ஒன்றுக்கான எரிபொருள் செலவு 700 ரூபாவினாலும், நீண்ட தூர பஸ் ஒன்றுக்கான எரிபொருள் செலவு 1200 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரின்ஜித் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர, சேவை கட்டணங்கள் உள்ளிட்ட பிற செலவுகளும் சமீபத்திய நாட்களில் வேகமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஏனைய பஸ் சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும், தமது சங்கத்தின் நிலைப்பாட்டை போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் நவம்பரில் பஸ் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றுவதற்கு சுகாதாரப் பிரிவு வழங்கிய வழிகாட்டுதலைக் கருத்தில்கொண்டு பஸ் கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.