காவல் நிலையத்துக்குள் பயங்கர வெடிகுண்டுடன் நுழைந்த இளைஞன்; பின்பு நடந்த எதிர்பாராத சம்பவம்!
இந்தியா : இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் கீழே கிடந்ததாக பயங்கர வெடிகுண்டு ஒன்றை காவல் நிலையத்துக்கு கொண்டுவந்த இளைஞன் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மஹாராஷ்ட்ராவில் நாக்பூர் நகரத்தில் சாய்பாபா நகரில் தனியாக வீடு எடுத்து வசிப்பவர் ராகுல் பகடே. 25 வயதாகும் இவர் சலூனில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு தாய், தந்தை இல்லை, மூன்று சகோதரிகள் மட்டுமே உள்ளனர். அவர்களும் திருமணமாகி வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று மாலை 5 மணிக்கு, திடீரென நந்தவன் காவல் நிலையத்துக்குள் ஒரு பையுடன் நுழைந்த ராகுல், அதனை கே.டி.கே கல்லூரிக்கு அருகில் கண்டெடுத்ததாகவும், அதில் வெடுக்குண்டு இருப்பதாகவும் கூறி பொலிஸாரை திகைக்கவைத்தார்.
அதிர்ச்சியடையுந்த பொலிஸார், அந்த பையை பார்த்தபோது அதில், பேட்டரி பொருத்தப்பட்ட ஒரு பயங்கரமான பெட்ரோல் வெடுக்குண்டு இருந்தது. அதனை பாதுகாப்பான இடத்துக்கு ஆய்வுக்கு அனுப்பிவைத்த பொலிஸார், ராகுலிடம் சந்தேகத்தின் அடிப்படியில் விசாரணையை தொடங்கினர்.
சில நிமிடங்கள் பொய்யான தகவல்களை கொடுத்துவந்த ராகுல், பிறகு பயத்தில் உண்மையை கக்கினார். அவர், இணையத்தில் டுடோரியல்களைப் பார்த்து வெடிகுண்டு தயாரிப்பதைக் கற்றுக் கொண்டதாகவும், அதை தானே செய்ய முடிவு செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.
இந்த இன்ஸ்டன்ட் வெடிகுண்டு தயாரிக்க, பட்டாசுகளிலிருந்து ஃபிளாஷ் பவுடரைப் பிரித்தெடுத்து, மொபைல் பேட்டரி மற்றும் பெட்ரோல் போத்தல்களைப் பயன்படுத்தியுள்ளார். பிறகு ஒயர் மூலம் பேட்டரியை இணைத்ததாக கூறினார்.
வெடிகுண்டை முழுமையாக செய்து முடித்த பிறகு, உண்மையில் அது வெடித்தால் என்ன ஆகுமோ என பயந்த ராகுல், அதனை வெடிக்காமல் செய்ய என்ன செய்வதென்று தெரியாமல், கீழே கிடந்ததாக காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம் என காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்றுள்ளார்.
ராகுல் பகடே, தான் எந்தவொரு பயங்கரவாத நோக்கத்திலும் இதனை செய்யவில்லை, அதனை வைத்து யாருக்கும் தீங்கு விளைவிக்கவும் விரும்பவில்லை என கூறியதாக பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கூறினர்.
பகடே மீது ஆயுதச் சட்டம் மற்றும் மும்பை பொலிஸ் சட்டத்தின் 123-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.