தமிழர்களை ஏமாற்றியதைப்போல் சர்வதேசத்தை ஏமாற்றவே முடியாது. சம்பந்தன் எச்சரிக்கை.
“இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று இலங்கை அரசு நினைத்தால் அது மிகப் பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாத இக்கட்டான நிலையிலேயே இலங்கை அரசு உள்ளது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்கின்றோம்.
தமிழ் மக்கள் நலனில் அக்கறைகொண்ட சர்வதேச சமூகம், இலங்கை மீது பல பரிந்துரைகளை முன்வைத்து பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இதன்போது பல வாக்குறுதிகளையும் இலங்கை அரசிடமிருந்து சர்வதேசம் பெற்றுள்ளது. இதை இந்தியா செய்திருக்கின்றது, ஐரோப்பிய ஒன்றியம் செய்திருக்கின்றது, ஐ.நா. சபை செய்திருக்கின்றது, அமெரிக்கா செய்திருக்கின்றது. இவ்வாறு பல நாடுகளும், நிறுவனங்களும் இலங்கை அரசிடமிருந்து பல்வேறு வாக்குறுதிகளைப் பெற்றுள்ளன.
அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசுக்குப் பல நாடுகளாலும், நிறுவனங்களாலும் போதிய கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசு, இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாத இக்கட்டான நிலையிலேயே இலங்கை அரசு உள்ளது.
வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வர வேண்டும். இல்லையேல் சர்வதேச அழுத்தங்கள் இலங்கை அரசு மீது மேலும் அதிகரிக்கும். அதை நாம் வரவேற்கின்றோம். ஏனெனில் அது சர்வதேச சமூகத்தின் கடமை. அந்தக் கடமையை சர்வதேச சமூகம் உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும்.
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு போதியளவு உதவிகளை சர்வதேச சமூகம் வழங்கியிருந்தது. அதன்போது தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என்ற வாக்குறுதியை சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கியிருந்தது. ஆனால், அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வைப்பது சர்வதேச சமூகத்தின் கடமை.
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கருமங்களை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும். தவறினால் நிலைமைகள் போகப்போக இன்னும் மோசமடையும். பலவிதமான தடைகள் இலங்கை மீது விதிக்கப்படலாம். அதாவது பயணத்தடை, பொருளாதாரத் தடை, மனித உரிமைகள் சம்பந்தமான தடைகள் எனப் பல தடைகள் வரலாம்.
எனவே, தான்தோன்றித்தனமாகச் செயற்படும் இலங்கை அரசு, தனது தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டியது மிகவும் அத்தியாவசியம். மாறாவிட்டால் அரசின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் சாத்தியமாக அமையாது” – என்றார்.