கம்மன்பிலவைப் பதவி விலகக் கோருவது வேடிக்கையானது! – சாகரவுக்கு மஹிந்த பதிலடி
கொழும்பு : “எரிபொருள் விலை அதிகரிப்பு, ஜனாதிபதி தலைமையிலான எமது அரசின் தீர்மானமாகும். இந்தநிலையில், வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவைப் பதவி விலகுமாறு கோருவது வேடிக்கையானது.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி, நான் மற்றும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் கூடியே எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான முடிவை எடுத்தோம். இதற்கு நிதி அமைச்சர் என்ற வகையில் நான் பூரண அனுமதியை வழங்கினேன்.
வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மட்டும் தனித்திருந்து எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானத்தை எடுக்கவில்லை. இந்தத் தீர்மானத்தை உதய கம்மன்பிலவை உள்ளடக்கிய வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே எடுத்தது.
இந்தநிலையில், வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவைப் பதவி விலகக் கோருவது வேடிக்கையானது. அமைச்சரவைப் பதவி விலகுமாறு கோருவதன் உள்நோக்கம் தொடர்பில் ஆராய்வேன். பிரச்சினையை ஊதிப் பெருக்குவது எமது அரசின் நோக்கம் அல்ல. எனினும், இந்த விவகாரம் தொடர்பில் எதிரணியினர் வாய்க்கு வந்த மாதிரி விமர்சனக் கருத்துக்களை வெளியிடுவதுதான் மேலும் வேடிக்கையாக இருக்கின்றது” – என்றார்.