இந்தியா : அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் – யோகி ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி வேகமெடுத்துள்ளது. இந்தப் பணிகளுக்காக மத்திய அரசால் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை கட்டமைக்கப்பட்டது. மொத்தம் 15 உறுப்பினர்கள் இந்த அறக்கட்டளையில் உள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவு படி கோவில் கட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் ரூ.400 கோடி செலவில் உலகத்தரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ பிரம்மாண்டமான ராமர் கோவில் அயோத்தியில் அமைக்கப்படவுள்ளது. தொலைத்தூர பகுதிகளில் இருந்து ராமர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள். இதனைக் கருத்தில்கொண்டு அயோத்தியில் 400 கோடி செலவில் உலகத்தரம் வாயந்த பேருந்து நிலையம் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு மாநில கலாசாரத்துறை வசமுள்ள 9 ஏக்கர் நிலம் போக்குவரத்துத் துறையிடம் வழங்கப்படும். ரூ.400 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள இந்தப் பேருந்து நிலையத்தில் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளும் இடம்பெறும். அயோத்தியில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பேருந்து இயக்கப்படும்.
மேலும் அயோத்தியா – சுல்தான்பூர் சாலையில் 4 வழிச்சாலையுடன் கூடிய மேம்பாலம் அமைக்கப்படும். ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1.5 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த மேம்பாலம் அமைக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.