கும்பமேளாவில் ஒரு லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்!
இந்தியா : கும்பமேளாவில் ஒரு லட்சம் போலி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழா இம்முறை உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை நதிக்கரையில் நடந்தது. ஏப்ரல் 1 முதல் 30ம் தேதி வரை நடந்த இந்த திருவிழாவில் கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுமார் 70 லட்சம் பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
தொடக்கத்தில் கொரோனா பரிசோதனையில் தொய்வு இருந்த நிலையில், உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் தினமும் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. 9 நிறுவனங்கள் மற்றும் 22 தனியார் ஆய்வகங்கள் மூலம் பக்தர்களுக்கு சுமார் 4 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் தனியார் நிறுவனம் ஒன்றால் ஒரு லட்சம் பரிசோதனைகள் போலியாக மேற்கொள்ளப்பட்டதாக விசாரணை அறிக்கை மூலம் தகவல் வெளியாகியுள்ளது. தலா 50 பேருக்கு ஒரே ஒரு செல்போன் எண்ணை பயன்படுத்தியுள்ளனர். ஆன்டிஜென் டெஸ்ட் உபகரணம் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி எண் இருக்கும் நிலையில் ஒரே உபகரணத்தின் எண் 700 மாதிரிகளை எடுக்க பயன்படுத்தப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது.
ஹரித்துவாரில் வீட்டு எண் 5 என்ற ஒரே முகவரி 530 பேரின் பெயர்களில் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு எண் 56, அலிகார், வீட்டு எண் 76, மும்பை என இரண்டு வார்த்தையிலும் முகவரிகள் பதியப்பட்டுள்ளன. கான்பூர், மும்பை, அகமதாபாத் உள்ளிட்ட 18 இடங்களில் இருந்து வந்தவர்களாக குறிப்பிடப்பட்டவர்கள் ஒரே செல்போன் எண்ணை கொடுத்துள்ளனர்.
கும்பமேளாவில் பரிசோதனைக்கு வந்தவர்களிடம் 200 பேர் மாதிரிகளை சேகரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த அந்த 200 பேரும் மருத்தவ பணியாளர்கள் அல்ல, மாணவர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள். அவர்கள் ஹரித்துவாருக்கு வரவே இல்லை. ஆன்டிஜென் பரிசோதனைக்கு 350 ரூபாயும், ஆர்.டி.பிசிஆர் பரிசோதனைக்கு பல நூறு ரூபாயும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டன.
தற்போது ஒரு லட்சம் போலி சோதனைகள் நடந்துள்ளதால் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரகாண்ட் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.