கடலில் பேரூந்துகளை மட்டுமல்ல ரயில் பெட்டிகளையும் இறக்குவேன்! டக்ளஸ் பகிரங்க சவால்.
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்பரப்பில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு சாதகமாக பழைய பேருந்துகளை மட்டுமல்ல பழைய ரயில் பெட்டிகளையும் இறக்கத் தயாராக இருக்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில்,
கடலினுள் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக இலங்கை மட்டும் பழைய இரும்புகளை கடலினுள் இடவில்லை. ஐரோப்பிய நாடுகள் உட்பட சுமார் 40 க்கு மேற்பட்ட நாடுகள் கடல் வாழ் உயிரினங்களின் வளர்ச்சிக்காக பழைய பேருந்துகள் மற்றும் பழைய கார்களை கடலில் இடுவது வழமையாக உள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் பழைய பேருந்துகளை இறக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன போராட்டங்களை செய்திருந்தார்கள். ஆனால் பழைய இரும்புகளை கடலினுள் செலுத்தி மீன் இனப்பெருக்கத்தை மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது.
நாம் புத்திஜீவிகள் மற்றும் துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களைப் பின்பற்றி செயர்க்கை முறையிலான மீன் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பழைய பேருந்துகளை கடலினுள் செலுத்தினோம்.
ஆகவே மீன் இனங்களின் வளர்ச்சிக்காக பழைய பேருந்துகளை மட்டுமல்ல இலங்கையிலுள்ள பயன்படுத்த முடியாத ரயில் பெட்டிகளையும் கடலினுள் செலுத்துவதற்கு தயாராக இருக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.