கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்… அரசு வழங்கும் வைப்பு நிதியைப் பெற என்ன செய்ய வேண்டும்
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசு வழங்கும் வைப்பு நிதியைப் பெற என்ன செய்ய வேண்டும் என தற்போது பார்க்கலாம்..
கொரோனாவால் தாய் தந்தை இருவரை இழந்தவர்கள் மற்றும் ஏற்கனவே பெற்றோரில் ஒருவரை இழந்து தற்போது கொரோனாவால் மற்றொருவரையும் இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அந்த குழந்தைக்கு 18 வயதான பிறகு முதிர்வுத்தொகை வழங்கப்படும்.
கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் அரசு இல்லங்களில் தங்கி உயர் கல்வி படிப்பதற்கான செலவை அரசே ஏற்கும். உறவினர்களுடன் வசிக்க விரும்பினால் அந்த குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். கொரோனாவால் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்து இருந்தால் உயிரோடு இருக்கும் மற்றொருவரிடம் ரூ.3 லட்சம் கொடுக்கப்படும். மேலும் இந்த குழந்தைகளுக்கு அரசின் மற்ற திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.
மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்படும் குழு உதவி தேவைப்படும் குழந்தைகளை கண்டறியும். சம்பந்தப்பட்ட குழந்தைகள் இவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் 1098 என்ற உதவி எண்ணுக்கு அழைக்கலாம். குழந்தையின் விவரங்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
சென்னையின் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தை நேரடியாக 044 – 25952540 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் பயனாளியாக, கொரோனாவால் பெற்றோர் உயிரிழந்தனர் என கூறும் இறப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து உயிரிழந்தவர்களாக இருந்தால் அவர்களுக்கு கொரோனா வந்ததற்கான பரிசோதனை அறிக்கை, சிடி ஸ்கேன் அறிக்கை, போன்ற மருத்துவ சான்றிதழ்களை கொண்டும் இத்திட்டத்தின் கீழ் இடம் பெறலாம்.
கொரோனாவில் பெற்றோர்களில் இருவரை இழந்திருந்தால் வருமான வரம்பின்றி இத்திட்டத்தின் கீழ் இடம் பெறலாம். ஒருவரை மட்டும் இழந்திருந்தால் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும். இறந்தவர்கள் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைய முடியாது.