கொரோனா தடுப்பூசி போடுமாறு கட்டாயப்படுத்திய குடும்பம்- காவலாளி எடுத்த விபரீத முடிவு
ஹைதராபாத்தில் மணிகொண்டா பகுதியை சேர்ந்த காவலாளி ஒருவரை தனது குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதால் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூன் 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு தனது தாய் மற்றும் சகோதரருடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் 22 வயதான காவலாளி சிவபிரகாஷ் தற்கொலை செய்துகொண்டார். அவரது வீட்டின் அருகே ஒரு திறந்தவெளி இடத்தில் கையில் பூச்சிக்கொல்லி பாட்டிலுடன் மயக்க நிலையில் கிடந்த சிவபிரகாஷை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜூன் 13ஆம் தேதி உயிரிழந்தார்.
இதற்கிடையே, உயிரிழந்த சிவபிரகாஷின் சகோதரர் நாகதுர்கா ராவ் அளித்த புகாரின் படி, பிரகாஷின் குடும்பத்தினர் கடந்த சில வாரங்களாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் தடுப்பூசிக்கு பல காரணங்களை சுட்டிக்காட்டி அதை செலுத்திக்கொள்ளாமல் மறுத்து வந்துள்ளார். அதன் பிறகு ஏற்பட்ட வாக்குவாதத்தால் சிவபிரகாஷ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி அருகே தல்லபாலம் கிராமத்தைச் சேர்ந்த சிவபிரகாஷ், கே.பி.ஆர் காலனியின் குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். சிவபிரகாஷின் தற்கொலை சம்பவம் குறித்து ராய்துர்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.