கங்கையில் மிதந்து வந்த பச்சிளம் பெண் குழந்தை – அதிர்ச்சியில் காவல்துறை
உத்தரப்பிரதேசத்தில் கங்கை நதியில் மிதந்து வந்த குழந்தையை மீட்ட மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாவட்டம் காசிப்பூர் பகுதியில் பாய்ந்து ஓடும் கங்கை நதியில் பிறந்த 20 நாள்களே ஆன பச்சிளம் குழந்தை மரப்பெட்டியில் மிதந்து வந்துள்ளது. ஆற்றங்கரையோரம் படகில் இருந்த நபர் ஒருவர் குழந்தை அழும் சத்தம் கேட்டும் அக்கம் பக்கம் சுற்றிப்பார்த்துள்ளார். அப்போது ஆற்றில் மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குழந்தையை அந்தப்பெட்டியுடன் எடுத்துள்ளார்.
அழகாக வடிவமைக்கப்பட்ட அந்த பெட்டியில் சிவப்பு நிற துணியில் குழந்தை சுற்றி வைக்கப்பட்டிருந்தது. காளிதேவியின் புகைப்படம் அந்த மரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அந்த மரப்பெட்டியில் குழந்தையின் பிறப்பு சான்றிதழும் இருந்துள்ளது. அந்தப்படகுக்காரர் குழந்தையை தானே வளர்க்க விரும்பி குழந்தையை வீட்டிக்கு எடுத்துச்சென்றுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து உள்ளூர் மக்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தையை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட காவல்துறையினர் காப்பகத்தில் குழந்தையை சேர்த்தனர். இதுகுறித்து பேசிய காவலர்கள், “ குழந்தையின் பெயர் கங்கா என பிறப்பு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தை தண்ணீரில் தவறி விழுந்ததாக தெரியவில்லை. முழுவதுமாக தயார் நிலையில் வைத்து அனுப்பியுள்ளனர். அந்த மரப்பெட்டியை புதிதாக வாங்கியுள்ளனர். குழந்தையின் உடல்நலனை பரிசோதித்தோம் ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம் “ என்றனர்.