அமைச்சர் டக்ளசுக்கு பாராட்டையும், கவலையையும், கோரிக்கையையும் ஒருசேர தெரிவிக்கிறேன். மனோ கணேசன்.
13ம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது.
உண்மையில் ராஜபக்ச அரசின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம். எனவே அமைச்சர் இதுபற்றி தனது அரசுக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அவருக்கு அரசுக்குள்ளே இருக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், இது தொடர்பில் ஆதரவளிக்க வேண்டும் இது எம் கோரிக்கை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் விவரித்து கூறியுள்ளதாவது,
அமைச்சரவை தீர்மானத்தின்படி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளை, மத்திய அரசு சுவீகரிப்பது தொடர்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மாகாண வைத்தியசாலைகளும் பறிக்கப்படும். ஆகவே இவை பற்றி வடக்கில், கிழக்கில், மலையகத்தில் இருந்து அரசுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் சமகாலத்தில் எதிரணியில் இருந்து அரசு பக்கம் சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்பீக்களும் தமது எதிர்ப்புகளை காட்ட வேண்டும்.
உண்மையில், 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல் செயயும்படியே, இந்திய அரசாங்கம், ஐநா மனித உரிமை ஆணையம், ஐரோப்பிய பாராளுமன்றம் என்பவை கோதாபய ராஜபக்ச அரசாங்கத்தை திரும்ப, திரும்ப கூறுகின்றன.
13ம் திருத்தத்தை முழுக்க அமுல் செய்வதை நிறுத்தியது ஒருபுறமிருக்க, இப்போது இருப்பதையும் பறிக்கும் செயன்முறையை இந்த அரசு மேற்கொள்கிறது. இது நிச்சயமாக, இந்திய அரசுடனான உறவு, செப்டம்பரில் அடுத்து வரும் ஐநா மனித உரிமை ஆணையரின் வாய்மொழி அறிக்கை, ஐரோப்பிய பாராளுமன்ற ஜிஎஸ்பி+ விவகாரம் ஆகியவற்றில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அமைச்சர் தனது ஜனாதிபதிக்கு எடுத்து கூற வேண்டும். பார்க்கப்போனால், இந்த ஜனாதிபதிக்கு உள்நாட்டு அரசியல் சட்டமும் தெரியவில்லை. இலங்கை பற்றிய வெளிநாட்டு நகர்வுகளும் தெரியவில்லை போல் எமக்கு தெரிகிறது.
13ம் திருத்தத்தின்படி மாகாணசபைகளுக்கு உரித்தான மருத்துவமனைகளை மத்திய அரசு சுவீகரிக்கும் தீர்மானத்தை அமைச்சரவை மேற்கொண்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்பதை அமைச்சரவையில் சுட்டிக்காட்டினேன் என அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளமை பாராட்டுக்குரியது.
ஆனால், அதற்கான காரணமாக தமிழ் மக்கள் தனது கட்சிக்கு வாக்களித்து, தனக்கு அரசியல் பலத்தை தராமையே எனவும், அது தமிழ் மக்களின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானமே எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை கவலைக்குரியது.
உண்மையில் ராஜபக்ச அரசின் “அதிகார பரவலாக்கலுக்கு” எதிரான பெருந்தேசியவாத நிலைப்பாடே இதற்கு காரணம். எனவே அமைச்சர் இதுபற்றி தனது அரசுக்குள்ளே விடாமல் போராட வேண்டும். அவருக்கு அரசுகுள்ளே இருக்கும் ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகள், இது தொடர்பில் ஆதரவளிக்க வேண்டும்.
இந்நாட்டில், அதிகார பரவலுக்காக தமிழ் மக்கள் சிந்திய இரத்தம், கொடுத்த விலை என்பவை சில அமைச்சரவை தீர்மானங்களால் சுலபமாக பறி போக கூடாது. இந்த உண்மை, அரசில் இருக்கும் தமிழ், முஸ்லிம் முழு அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள், எம்பீக்கள் ஆகியோருக்கு தெரிய வேண்டும்.