தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காவி நிற திருவள்ளுவர் படம் அகற்றம்.. முடிவுக்கு வந்த சர்ச்சை..!
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் காவி உடையுடன் இருந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டு, வெள்ளை உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டதையடுத்து சர்ச்சை முடிவுக்கு வந்தது.
திருவள்ளுவர் படம் எந்த அடையாளத்தையும் குறிப்பிடாத வகையில் வெள்ளை உடையுடன் சித்தரிக்கப்பட்ட படமே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழக பாஜக கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தை காவி உடை மற்றும் விபூதியுடன் பதிவிட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவும் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை பதிவிட்ட நிலையில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதை அகற்றினார்.மேலும் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதற்கு திமுக கடும் கண்டனத்தை பதிவு செய்தது.
இந்நிலையில் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் உள்ள நூலகத்தில் சமீபத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது நூலக நுழைவு வாயிலில் புதிதாக திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டுள்ளது.
இதில் திருவள்ளுவர் காவி உடை அணிந்தவாறு வைத்திருப்பது புதிய சர்சையை கிளப்பி உள்ளது. மேலும் தமிழக அரசால் அங்கீரகப்பட்ட வெள்ளை உடையிலான உடையுடன் எந்த அடையாள குறியீடும் இல்லாத திருவள்ளுவர் படத்தை பொருத்த வேண்டும், காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை வேளாண் பல்கலை நூலகத்தில் பொருத்த யார் வழங்கினார்கள் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்து வந்தன.
இதனிடையே சர்ச்சையானதையடுத்து காவி உடையுடன் இருந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டு, தற்போது வெள்ளை உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது.