கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு ஆபத்தா? ஆய்வு கூறுவது என்ன?
கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படக் கூடும் என கூறப்படும் நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார ஆய்வு மையம் – எய்ம்ஸ் நடத்திய ஆய்வின் முடிவுகள் பெற்றோருக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக உள்ளது.
இந்தியாவில் கொரோன தோற்றின் 2வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. முதல் அலையை விட 2வது அலையில் உயிரிழப்பு அதிகமாக இருந்தது. தற்போது தொற்றின் வேகம் குறைந்து தினசரி பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த ஒரு சில வாரங்களில் கொரோனா பாதிப்பு பெரிதும் குறையும் என கருதப்படுகிறது.
அதேவேளையில், கொரோனா மூன்றாவது அலைக்கு வாய்ப்புள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்கூட இக்கருத்தை தெரிவித்துள்ளதோடு, மூன்றாவது அலையை எதிர்க்கொள்ள தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இதேபோல், பல்வேறு மாநில அரசுகளும் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
கொரோனா மூன்றாவது அலையின்போது, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் வெளியாகின. இது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உலக சுகாதார ஆய்வு மையம் மற்றும் இந்தியாவின் எய்ம்ஸ் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டன. 5 மாநிலங்களில் சுமார் 10 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் கொரோனா மூன்றாவது அலையால், குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என தெரியவந்துள்ளது.
குழந்தைகளிடம் SARS-CoV-2 வைரஸுக்கு எதிரான நேர்மறை விகிதம் அதிகமாகவும் பெரியார்களுடன் ஒப்பிடும் வகையிலும் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே, மூன்றாவது அலையால் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி பாதிக்கும் சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தெற்கு டெல்லியில் வசிக்கும் மக்களிடையே இந்த விகிதம் அகிதம் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்கான பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என தெரியவந்துள்ளதால் டெல்லி நகர்புற பகுதிகளில் பள்ளிகளை திறக்கவும் இந்த ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.