“போலி தொலைபேசி அழைப்புகளுக்கு பலியாகவேண்டாம் – அஜித் ரோஹண.
வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் – 21 தாக்குதல் சம்பவத்தை தொடர்புபடுத்தி இனந்தெரியாத நபர்களால் இவ்வாறான அழைப்புகள் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு மேற்கொள்ளப்படும் அழைப்புக்களில் அதிகமானவை நிலையான தொலைப்பேசிகளுக்கு மேற்கொள்ளப்படுதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவங்களை காரணம் காட்டி, வங்கி கணக்குகளில் ஒரு தொகை பணத்தை வைப்பிலிடுமாறு மோசடியாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் , இதுபோன்ற அழைப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவிப்பதுடன், மோசடியாளர்கள் கூறும் வங்கி கணக்குகளில் பணத்தை வைப்பிலிட வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார்.