எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து சொற்போரால் அதிரும் அரச கூட்டணி!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்கும் இடையிலான சொற்சமர் நீடிக்கின்றது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து அதற்குப் பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், “கொரோனா நெருக்கடியால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளமை ஏற்கமுடியாது. எனவே, இந்நிலைமைக்கு பொறுப்பேற்று துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும்” என்று ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கடந்த 12ஆம் திகதி மாலை விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில விசேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தினார்.
“எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான முடிவை வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவே எடுத்தது. அது அரசின் முடிவு. ஜனாதிபதி மற்றும் பிரதமரைப் பாதுகாக்கவே நெருக்கடியான நிலையிலும் விலை அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை நான் சுயமாக முன்வந்து விடுத்தேன். எனவே, இவ்விவகாரம் தொடர்பில் பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்துக்கு பகிரங்கமாக சவால் விடுக்கின்றேன்” என்று கம்மன்பில குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் கடந்த 13ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் காமினி லொக்குகேயும், பொதுச்செயலாளர் சாகர காரியவசமும் இதில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கம்மன்பிலவுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்திலேயே குறித்த ஊடக சந்திப்பில் சாகர பங்கேற்கவிருந்தார். எனினும், இறுதி நேரத்தில் ஊடக சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.
அதன்பின்னர் சாகர தலைமையில் ‘மொட்டு’ கட்சி தலைமையகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது தான் விடுத்த அறிக்கை தொடர்பான நிலைப்பாட்டில் இன்னும் மாற்றம் இல்லை. கட்சியும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது” என்று சாகர அறிவித்தார்.
இந்நிலையில், இதற்கு நேற்று பதிலடி கொடுத்த கம்மன்பில, “மொட்டுக் கட்சியின் பொதுச்செயலாளர் தான் விடுத்த அறிக்கையை மீளப்பெறவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்னுடன் விவாதத்துக்கு வரவேண்டும்” – என்று குறிப்பிட்டார். இவ்வாறு இருவருக்கும் இடையில் சொற்போர் நீடிக்கின்றது.