“பப்ஜி” மதனை தனிப்படை போலீஸ் தர்மபுரியில் வைத்து வளைத்து பிடித்தது

தடைசெய்யப்பட்ட விளையாட்டை ஆபாச வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்த “பப்ஜி” மதன் கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்படை போலீசார் அவரை தருமபுரியில் பிடித்து கைது செய்தனர். அவரது மனைவி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட “பிளேயர்ஸ் அன்நோன் பேட்டில்கிரவுண்ட்” என்ற விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்துவந்த புகாரில் பப்ஜி மதன் என்ற நபர் போலீசால் தேடப்பட்டுவந்தார். அவருடைய மனைவி கிருத்திகா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
மதன் மீது 159 புகார்கள் பதிவாகியுள்ளன. அதில் ஒரு புகாரின் பேரில் பெண்களை அபாசமாகப் பேசுதல், ஆபாசமாகத் திட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடைசெய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இதுதவிர, தன்னுடைய விளையாட்டை நேரலையாகப் பார்ப்பவர்களிடம் இருந்து பெரும் அளவில் பணம் வாங்கிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது உள்ளன.
“மதன்” என்ற யூடியூப் சேனலை அவர் நடத்திவந்தார். ஆனால், அவரது குரல் வர்ணனையில் ஆபாசமான வசைகள் சகட்டு மேனிக்கு இடம் பெற்றன. குறிப்பாக பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவது, உடன் விளையாடுவோரை ஆபாசமாகப் பேசுவது ஆகியவை இதில் அடக்கம்.