பஸில் வந்ததும் கூட்டமைப்புடன் கோட்டா பேச்சு! இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் வெளியாகியது தகவல்.
கொழும்பு: அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் திரும்பியதும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான பேச்சு நடைபெறும் என்று இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே முன்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் தூதுவருடான நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பஸில் ராஜபக்சவையும் வைத்துக்கொண்டு எங்களுடன் பேச்சு நடத்த விரும்புகின்றார் என்று தெரியவருகின்றது. அதனாலேயே அவருடனான சந்திப்பை இறுதி நேரத்தில் ஒத்திவைத்துள்ளார். பஸில் ராஜபக்ச வந்ததும் மீண்டும் பேச்சு நடக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தை இந்தியத் தூதுவர் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கொரோனாத் தடுப்பூசிகள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கூறப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குத் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 50 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளனவே என்று குறிப்பிட்டுள்ளார். அது போதாது என்று குறிப்பிட்ட கூட்டமைப்பினர் அதிகளவான தடுப்பூசிகள் தேவை என்று வலியுறுத்தினர்.
இதன்போது இந்தியத் தூதுவர், தமது நாட்டில் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது எனவும், உற்பத்தி குறைவாக உள்ளது எனவும், அதனால் இப்போது வழங்க முடியாத சூழல் இருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகள் தீர்ந்த பின்னர் இலங்கைக்கு மாத்திரமல்ல ஏனைய நாடுகளுக்கும் கொரோனாத் தடுப்பூசிகளை இந்தியா வழங்கும் எனவும் தூதுவர் கூறியுள்ளார்.