கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மண்கவ்வும்! – திலும் அமுனுகம கருத்து.
கொழும்பு: வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு தோற்கடித்தே தீரும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எரிபொருள் விலை அதிகரிப்பை அமைச்சர் உதய கம்மன்பில பொறுப்பேற்ற வேண்டும் என்று கூறி, எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது.
எரிபொருள் சர்ச்சையை எதிர்க்கட்சி சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது.
அரசு பிரபல்யம் இல்லாத தீர்மானங்களை மேற்கொள்ளும்போது அமைச்சர் ஒருவரை சிக்கலில் மாட்டிவிடுவது பொருத்தமில்லை.
அரசு மேற்கொண்ட தீர்மானத்துக்கான பொறுப்பை ஆளும் கட்சியின் அனைவரும் எடுக்க வேண்டும்.
ஆளும் கட்சிக்கு பாராளுமன்றத்தில் 150 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கும்போது, 22 பேர் கையொப்பமிட்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது வேடிக்கையாகும்” – என்றார்.