பயணக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவது பேராபத்து! எங்கள் கருத்துக்குச் செவிமடுக்க வேண்டும் அரசு!
நாட்டை முடக்கி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள சூழலில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது பேராபத்தானது என சுகாதார நிபுணர்கள் கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தோடு, வைரஸ் தொற்று வேகமாக பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளது எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் மிக மோசமான தொற்றாகக் கருதப்படுகின்ற பி.1.617.2 என அடையாளப்படுத்தப்படும் இந்தியாவில் பரவும் ‘டெல்டா’ வைரஸ் பரவல் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்த விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று சுகாதார, வைத்திய நிபுணர்கள் நேற்றுக் கூடிய கொரோனாத் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
“பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட வேண்டும் என்பதற்கு அரசிடம் இருக்கும் ஒரே சாட்டு நாட்டின் பொருளாதார நெருக்கடி என்ற காரணி மட்டுமே. அதனை நாம் நிராகரிக்கவில்லை. ஆனால், மக்களின் உயிர் பாதுகாப்பு என்பது நாட்டின் பொருளாதார நெருக்கடியை விடவும் முக்கியமானது. இப்போது பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதால், கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவ இரண்டு நாட்கள் போதுமானதாக இருக்கும். எனவே, நிலைமைகளைப் புரிந்துகொண்டு எமது கருத்துக்குச் செவிமடுக்க வேண்டும்” எனவும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.