காரை நிறுத்தி மனுக்களை பெற்ற முதல்வர்: சாலையில் காத்திருந்தவர்கள் இன்ப அதிர்ச்சி!
சென்னையில் சாலையில் காத்திருந்திருந்த ஆசிரியர்களை பார்த்ததும், காரை நிறுத்தி கோரிக்கை மனுவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செய்து, மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்று வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
கடந்த வாரம் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் கான்வாயை நிறுத்தி கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டது சமூக வலைதளங்களில் வைரலானது.
அதேபோல், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு தலைமை செயலகம் செல்ல முதலமைச்சர் கிளம்பிச்சென்றார். இந்நலையில், ஆசிரியர்கள் சிலர் கோரிக்கை மனுவுடன் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு வெளியே காந்தி மண்டபம் சாலையில் காத்திருந்தனர்.
ஆசிரியர்கள் காத்திருந்ததை பார்த்ததும், காரினை நிறுத்த சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களிடம் நலம் விசாரித்து, நீங்கள் யார் எதற்காக காத்திருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அவர்கள், தாங்கள் ஆசிரியர்கள் என கூறி கோரிக்கை மனுவை கொடுத்துள்ளனர். அதை வாங்கி படித்துப் பார்த்த பின், ஏன் சாலையில் காத்திருக்கிறீர்கள், தலைமை செயலகத்திற்கு வந்து பாருங்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
எவ்வித முன்னறிவிப்புகளும் இன்றி காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலினை எளிமையாகச் சந்தித்ததும், சந்திப்பின் போது எந்த காவலர்களும் அவர்களை தடுக்காமலிருந்த அணுகுமுறையும் மகிழ்ச்சி அளித்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோரிக்கை மனு அளித்த ஆசிரியர் அருள்செல்வி கூறுகையில், 2018-19ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசியர்கள். 2019ம் ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, ஒரு பிரிவினர் பணியில் அமர்த்தப்பட்டனர். இரண்டாம் பட்டியலில் இருந்த 1500 பேர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறோம். கொரோனா தொற்று பரவல், தேர்தல் உள்ளிட்டவை காரணமாக பணி வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்க கோரிக்கை மனு அளித்துள்ளோம். முதல்வர் எங்களை பார்த்ததும் காரை நிறுத்தி, எளிமையாக கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
பின்னர் உடனடியாக அவர்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.