கிளிநொச்சி மாவட்டச் செயலக விசேட சந்திப்பு! ஒரே நாளில் பல்வேறு விடயங்களுக்குத் தீர்வு.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, மாவட்டச் செயலகத்தில் ஜுன் 18ம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்திய விசேட சந்திப்பில், கொவிட் தொற்று முதல் மண்கழ்வு வரைவில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் துரிதமாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார்.

கொவிட்-19 தொற்று, பயணத்தடைச் சூழ்நிலையில் அவசரமாக, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்திய இந்தச் சந்திப்பில் பல்வேறு முக்கிய பிரச்சினைகளையும் அவர் துரிதமாகத் தீர்த்துவைத்தார்.

கிளிநாச்சி மாவட்டத்தில் கொவிட் தொற்று நிலைமை பெருமளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் புள்ளிவிபரங்களுக்குடன் அமைச்சருக்கு விளக்கினார்.

ஆடைத்தொழிற்சாலையிலும் கொவிட் தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், அண்மையில் அடுத்தடுத்த நாட்களாக 3000க்கு அதிகமானவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 6 பேருக்கு மட்டுமே அங்கு தொற்று நிலைமை இனங்காணப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆடைத்தொழிற்சாலையில் இவ்வாறு தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமைக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் சிறந்த சேவையை காரணம் என்று இங்கு தெரிவித்த ஆடைத்தொழிற்சாலை உத்தியோகத்தர் ஒருவர், இந்த நிலையில், ஆடைத்தொழிற்சாலையை மூடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் அடிப்படையற்றவை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, குறுகிய நோக்குடன் இவ்வாறு மேற்கொள்ளப்படும் பிரசாரங்களுக்கு இடம்கொடுக்காமல் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக ஆடைத்தொழிற்சாலையை உரிய முறையில் தொடர்ந்து இயக்கிச் செல்லுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

சமுர்த்தி-இடர்காலக் கொடுப்பனவு!
இதனையடுத்து, கொவிட் இடர்காலக் கொடுப்பனவு தொடர்பாக சமுர்த்திப் பணிப்பாளரிடம் அமைச்சர் விளக்கம் கோரியபோது, சமுர்த்திப் பயனாளிகளுக்கு மாத்திரமே இதுவரையில் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், ஏனையோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான நிதி கிடைக்கப்பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பாக உடனடியாக சமுர்த்தி விவகார அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரைவில் ஏனையோருக்கான கொடுப்பனவுகளை வழங்க நிதியைப் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

காணிச் சர்ச்சைகள்!
இதனையடுத்து, மாவட்டத்தில் வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், காணி சீர்த்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்த அமைச்சர், இந்த விடயம் தொடர்பில் காணி அமைச்சர் சி.பி.ரத்னாயகாவுடன் உடனடியாக இவைபற்றி தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இதனையடுத்து, காணிச் சர்ச்சைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும், எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் காணியமைச்சரைச் சந்தித்துப் பேசி அவற்றுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இங்கு தெரிவித்தார்.

சேதனப்பசளை!
இதேவேளை, சேதனப் பயிர்ச்செய்கைக்கு மாறுவது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்டத்துக்கு பெரும்போகத்துக்குத் தேவையான சேதனப் பசளையின் அளவு தொடர்பான விபரங்களைத் தந்தால் அதற்கான ஏற்பாடுகளைத் தம்மால் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.

வடக்கு மாகாண அளவில் தேவையான சேதனப் பசளையின் அளவு தொடர்பான விபரத்தைத் திரட்டி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவிருப்பதாகவும், முதல் தடவை என்பதால், சேதனப் பசளைக்கு மாறுவதால் விளைச்சில் பாதிப்பு ஏற்படாத வகையில் உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இங்கு தெரிவித்தார்.

பொருளாதார மத்திய நிலையம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் வெளிநாட்டு முதலீட்டுடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள விவசாய பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக அமைச்சர் வினவியபோது, இதற்காக இனங்காணப்பட்ட காணிக்கான அனுமதியை கரைச்சி காணிப் பயன்பாட்டு திட்டமிடல் கூட்டத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் ஜெயகரன் தெரிவித்தார்.

இதனையடுத்து, விரைவில் மாவட்டச் செயலகத்தில் விசேட காணிப் பயன்பாட்டு திட்டமிடல் கூட்டத்தை நடாத்தி இதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறும், வனவளத் திணைக்கத்திடமிருந்து அந்தக் காணியை விடுவிக்க காணியமைச்சருடன் பேசி தீர்வு காண்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கரும்புத்தோட்டக் காணிச் சர்ச்சை!
கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்கந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள கரும்புத்தோட்டக் காணி தொடர்பான பிரச்சினையையும் இந்தக் கூட்டத்தில் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசுக்குச் சொந்தமான அந்தக் காணி நீண்டகாலமாக தனியாரின் பொறுப்பில் பயன்படுத்தப்பட்டு வருமானமீட்டப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், எனவே, அதனை அந்தப் பிரதேச மக்களின் பயன்பாட்டுக்கே வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கென அந்தப் பிரதேச விவசாய அமைப்பு பிரதிநிதிகளையும் இணைத்து உருவாக்கப்படும் ஒரு பொது அமைப்பிடம் அந்தக் காணியின் பொறுப்பைக் கொடுத்து, படிப்படியாக அதில் கரும்புச்செய்கையை ஆரம்பித்து, பிரதேச மக்கள் பயன்பெறக்கூடியதாக ஏற்பாடு செய்யுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.

வீட்டுத்திட்டம்!
கடந்த அரசாங்கம் இறுதி நேரத்தில் தேர்தலை இலக்காகக் கொண்டு வழங்கிய வீட்டுத் திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள பயனாளிகளின் பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு சிறிய தொகை பணம் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், புதிய திட்டங்களுக்குள்ளும் உள்வாங்கப்பட முடியாமலிருக்கும் நிலை தொடர்பாக மேலதிக மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டிய விடயத்தை ஏற்றுக்கொண்டார்.

இதன்படி, ஏற்கனவே வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு, அதற்குரிய நிதி கிடைக்காமல் அல்லற்படும் பயனாளிகளை புதிய வீீட்டுத் திட்டங்களுக்குள் உள்வாங்க துறைசார் அமைச்சருடன் பேசி ஏற்பாடு செய்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இங்கு உறுதியளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.