80 % ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. Wipro நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 80 விழுக்காடு ஊழியர்களுக்கு செப்டம்பரில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய ஐ.டி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. டாடா கன்சல்டன்சி, எச்.சி.எல், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு போட்டிப்போட்டுக் கொண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட பிற சலுகைகளை அறிவிக்கின்றன. இந்தப் போட்டியை சமாளிக்க விப்ரோ நிறுவனம் இந்த ஆண்டில் 2வது முறையாக ஊதிய உயர்வு அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி மாதம் ஊதிய உயர்வு அளித்திருந்த நிலையில், தற்போது 2 வது முறையாக ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விப்ரோ நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிங்கிள் டிஜிட்டல் உட்சபட்ச ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும், இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடுத்தர சிங்கிள் டிஜிட் ஊதிய உயர்வு இருக்கும் என கூறியுள்ளது. மேலும், சிறந்த பங்களிப்பு கொடுத்துள்ள ஊழியர்களுக்கு எதிர்பார்ப்புக்கு மேலான ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு இருக்கும் என விப்ரோ கூறியுள்ளது.
அசிஸ்டென்ட் மேனேஜர் லெவலுக்கு கீழாக பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மெரிட் அடிப்படையில் ஊதிய உயர்வு இருக்கும் என தெரிவித்துள்ளது. மேனேஜர் லெவலுக்கு மேலாக பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
அட்ரிஷன் ரேட் எனப்படும் ஊழியர்கள் வெளியேறும் விழுக்காடு மார்ச் மாதம் வரை 12 விழுக்காடு அதிகரித்ததால், மீண்டும் ஒரு ஊதிய உயர்வு குறித்து பரிசீலித்து வருவதாக அறிவித்துள்ளது. மேலும், திறமைக்கு ஏற்ற பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் பணியாற்றும் ஊழியர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் போட்டியாளராக கருதப்படும் டாடா கன்சன்டன்சி ஏற்கனவே ஊதிய உயர்வு அளித்திருந்தாலும் ஏப்ரல் மத்தியில் மீண்டும் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவித்தது.
இன்போஸிஸ் நிறுவனமும் மீண்டும் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனமும் ஏற்கனவே ஜனவரி மாதம் ஊதிய உயர்வு அளித்திருந்தது. எச்.சி.எல் கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் தங்களது நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளித்திருந்தது.
மகேந்திரா நிறுவனம் ஜனவரியில் சம்பளத்தை உயர்த்தியது. இந்தியாவில் இருக்கும் டாப் 5 ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள போட்டியால் ஊழியர்களுக்கு, 2வது முறையாக ஊதிய உயர்வை அறிவித்துள்ளன. முக்கிய நபர்கள் மற்றும் திறமையானவர்களை தங்களது நிறுவனத்தில் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய முடிவை டெக் நிறுவனங்கள் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனங்களின் முடிவுகள் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.