‘மொட்டு’ கட்சியைச் சேர்ந்த 60 பேர் ரணிலுடன் கைகோர்க்கக்கூடும்! – நளின் அதிரடி
“ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையமாட்டார்கள்; அவருக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்கள். எனினும், ஆளுங்கட்சி பக்கமுள்ள 60 பேர் ரணிலுடன் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவாவது:-
“நாடாளுமன்றம் வரும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்காது.
ரணில் என்பவர் எமக்குப் பிரச்சினை அல்ல. நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கே தற்போது முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.
சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரவியதாலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது சாதாரண விடயமாகும். மாறாக கட்சிக்குள் பிளவு இல்லை” – என்றார்.