வடக்கு வைத்தியசாலைகள் மத்திக்கு செல்வதை உடன் தடுத்துநிறுத்துங்கள் – ஆளுநருக்கு அவைத் தலைவர் கடிதம்.

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட பொது வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கான தீர்மானத்தை மீளாய்வுக்குட்படுத்தி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கான தீர்மானம் எடுகப்பட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் மூலம் அறியப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான எமது ஆட்சேபனையையும் அதிருப்தியையும் தெரிவிப்பதோடு இது மாகாண சபைகளுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுவதாக அமைகிறது என்பதை பதிவு செய்துள்ள விரும்புகின்றேன்.

இந்த விடயத்தில் இந்த நாட்டின் அரசியலமைப்பின்படி மாகாண சபைகள் நியதிச் சட்டம் இயற்ற அதிகாரமளிக்கும் ஒன்பதாவது அட்டவணையின் நிரல் I இன் 11:1 பந்தியின் பின்வரும் ஏற்பாடுகளுக்கு தங்கள் அவதானத்தைக் கோர விரும்புகின்றேன்.

“(போதனா வைத்தியசாலைகளும் விசேட நோக்களுங்களுக்காகத் தாபிக்கப்பட்ட மருத்துவமனைகளும் தவிர) பொது மருத்துவமனைகளையும் கிராம மருத்துவமனைகளையும் மகப்பபேற்று மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் தாபித்தலும் பேணுதலும்”

இதன்படி போதனா வைத்தியசாலைகள் மற்றும் விசேட நோக்கங்களுக்கான வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகள் யாவும் மாகாண சபைகளின் நிர்வாகத்திற்குட்பட்டவையாகும்.

இந்த ஏற்பாட்டின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய வடக்கு மாகாண சபையானது அதனது 12.01.2016 ஆம் திகதிய அமர்வில் நிறைவேற்றிய 2015ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் 08.02.2016ஆம் திகதி ஆளுநரின் சம்மதம் கிடைக்கப் பெற்று சட்டமாக அமுலில் உள்ளது.

இந்த நியதிச் சட்டத்தின் பிரிவு 3 (அ) இன் கீழான அட்டவணை I இன்படி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைகள் வட மாகாண சபையின் மாவட்ட பொது வைத்தியசாலைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. யாழ்ப் பாணம் மாவட்டம் இதில் உள்ளடக்கப்படாத காரணம் இம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை ஏற்கனவே இயங்கி வந்தமையே இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட மாவட்ட பொது வைத்தியசாலை எதையும் மாகாண சபையிடமிருந்து மத்திய சுகாதார அமைச்சு கையேற்பது அரசமைப்புக்கும் மாகாண சபையின் நியதிச் சட்டத்திற்கும் முரணானதாகும்.

இந்த மாவட்ட வைத்தியசாலைகளின் சேவைகளிலும் வசதிகளிலும் குறைபாடுகள் காணப்படுவதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்படுவதாயின் அதற்கான தீர்வு இவைகளை மத்திய மயப்படுத்துவதல்ல. அக்குறைபாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கை களை மாகாண நிர்வாகம் ஊடாக மேற்கொள்வதே பொருத்தமானதாகும்.

நிர்வாகம் மத்திய சுகாதார அமைச்சின் கீழோ அல்லது மாகாண சபை நிர்வாகத்தின் கீழோ இருந்தாலும் அநேகமாக அதே ஆளணியினரே செயற்படுவர் என்பது தெளிவு. ஏனெனின் வைத்தியத்துறை சார்ந்த சகல அதிகாரிகளும் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்படுவதுடன் அவர்களது ஒழுங்குக் கட்டுப்பாடும் அதனிடமே உள்ளது.

உண்மையாக இவ்வைத்தியசாலைகளுக்குத் தேவை உட்கட்டுமான மேம்படுத்தலும் பொருத்துமான நிபுணத்துவ வைத்தியர்களுமே. இவற்றை நிறைவேற்றுவதற்கான போதிய நிதியை மாகாண நிர்வாகத்திற்கு வழங்குவதன் மூலம் சகல குறை பாடுகளும் நிவர்த்திக்கப்படலாம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

மாகாண நிறைவேற்று அதிகாரியாகவுள்ள சிரேஷ்ட நிர்வாகியாகிய தாங்கள் இவற்றின் மேம்படுத்தலுக்கான நிதியை மாகாண சபை நிர்வாகத்திற்கு வழங்கினால் இனங்காணப்படும் குறைபாடுகளை நிர்வதிக்கும் ஆற்றல் தங்களுக்கு உண்டு என்பதை உயர்மட்டத்திற்கு சுட்டிக்காட்டி இந்த முடிவை மீளாய்வுக்குட்படுத்தி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தங்களை அன்புடன் வேண்டுகின்றேன்” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.