யாழில் 2021 வாக்காளர் பட்டியல் மீளாய்வு ஆரம்பம்!
2021ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் மீளாய்வு நாளை (21) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை வழமை போன்று கிராம அலுவலர்கள் வீடு வீடாக ‘பிசி’ படிவம் விநியோகிக்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக வீடு வீடாக ‘பிசி’ படிவம் விநியோகித்து வாக்காளர் பெயர்ப்பட்டியல் மீளாய்வை இம்முறை தேர்தல்கள் ஆணைக்குழு கைவிட்டுள்ளது. அதற்குப் பதிலாக வாக்காளர் பெயர்ப் பட்டியலில் புதிதாக தம்மை இணைத்துக்கொள்ள வேண்டியோர், பெயர்ப்பட்டியலில் பெயர் நீக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பான தகவல்களை மாத்திரம் பெற்றுக் கொண்டு மீளாய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.
18 வயதைக் கடந்தவர்கள் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களை நீக்க உள்ள குடும்பங்கள் கிராம அலுவலரைத் தொடர்புகொண்டு படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்கவேண்டும். இதற்குரிய படிவம் கிராம அலுவலர் அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் தேர்தல்கள் திணைக்களத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.