இலங்கைக்குச் சீனா அடுத்த மாதம் 20 கோடி டொலர் கடன் உதவி!
சீன அபிவிருத்தி வங்கியுடன் (சி.டி.பி.) செய்து கொண்டுள்ள 70 கோடி டொலர் கடன் ஒப்பந்தத்துக்கு அமைய மீதமுள்ள 20 கோடி டொலர்களை அடுத்த மாதம் அளவில் இலங்கை அரசு பெற்றுக்கொள்ளவுள்ளது.
கொரோனாத் தொற்று நோய் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசின் செயற்பாடுகளுக்கு பங்களிப்புச் செய்யும் வகையில் இந்தக் கடன் உதவியை சீன அரசு இலங்கைக்கு வழங்கியது.
இதில் முதல் கட்டமாக 50 கோடி டொலர்களை ஏப்ரல் மாதத்தில் இலங்கை பெற்றுக்கொண்டிருந்தது.
“மிகுதித் தொகையான 20 கோடி டொலர்களை வழங்குவதற்கான ஆயத்தங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் மேற்கொண்டு வரும் நிலையில், ஜூலை மாதத்துக்குள் இதனை சி.டி.பியிடமிருந்து இலங்கை பெறும்” என்று நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல்லே ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியுடனான 1.5 பில்லியன் டொலர் இடமாற்று வசதிக்கு சீனாவின் மத்திய வங்கி ஒப்புதல் அளித்த பின்னர் இந்தக் கடன்கள் கிடைக்கப் பெற்றன.
இரு நாடுகளினதும் மத்திய வங்கிகளுக்கிடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
இதனிடையே, இலங்கை 2025ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 4.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.
இது தொடர்பாக, நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி வெளிநாட்டு வரவுகள் மூலம் நாட்டின் கடன்களைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.