வாகனங்களுக்கான ஆவணங்கள் புதுப்பிப்பு கால அவகாசம் நீட்டிப்பு!
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் விதிக்கப்பட்டதால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஏற்றுமதி, இறக்குமதி இல்லாததால் வாகனப் போக்குவரத்துகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைகளைத் தவிர மற்ற அரசு சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலையும் இருந்தது.
இருசக்கர, நான்கு சக்கர உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமைச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை குறிப்பிட்ட தேதியில் பலராலும் புதுப்பிக்க முடியாமல் காலவதியாகியுள்ளது. இது குறித்து வாகன உரிமையாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் லாரி போன்ற கனரக வாகனங்களின் உரிமங்கள், பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை புதுபிக்க முடியவில்லை என்றும், இதனைக் கருத்தில் கொண்டு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
வாகன உரிமையாளர்களின் கோரிக்கையைக் பரிசீலித்த மத்திய அரசும், அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதற்கான கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது. இது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொருந்தும் என தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறைக்கு இது குறித்து உரிய அறிவிப்பு மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மத்திய அரசின் இந்த நெறிமுறைகளை அனைத்து அலுவலகங்களுக்கும் தெரியப்படுத்தி, உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த அறிவிப்பில், 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 2021 செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிகளுக்கு இடையில் காலவதியாக உள்ள வாகனங்களின் சான்றிதழ்களை, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் புதுபித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாக முற்றுபெறாத நிலையில், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியது. ஜனவரியில் மெல்ல அதிகரித்த பாதிப்பு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் உச்சக்கட்டத்தை எட்டியது. கடுமையான ஊரங்கு கட்டுப்பாடுகளால் கட்டுக்குள் வந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், ஊரடங்கு விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனால், 2 வது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.