விமல் – ரணில் கூட்டணி? அதிரப் போகும் இலங்கை அரசியல் களம்
அரசாங்கத்தின் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவை அடுத்து அமைச்சர் விமல் வீரவன்சவின் தரப்பிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் மூன்றாவது தரப்பு ஊடாக இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2000மாவது ஆண்டு ஐதேக நடத்திய ஜனபல மெகய எனும் ஊர்வலத்தில் சென்றவர்களுக்கு அப்போதைய சந்திரிகா அரசு துப்பாக்கி சூடு நடத்திய போது ஒருவர் உயிரிழந்தார். அவரது மரண சடங்கில் ஒன்றாக கலந்து கொண்ட ரணிலும் விமலும் ஒரே மேடையில் அன்றைய அரசுக்கு எதிராக பேசினார்கள். பின்னரான காலத்தில் விமல் சந்திரிகாவோடு இணைந்தார். இப்படியான உறவுகள் அவர்களிடம் உள்ள நிலையில் பிரபல பிக்கு ஒருவர் இவர்களுக்கிடையே மத்தியஸ்தம் வகித்து செயற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதன்படி 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பாரிய கூட்டணி ஒன்றை அமைத்து விமல் வீரவன்சவிற்கு ஜனாதிபதி பொது வேட்பாளர் அந்தஸ்த்து வழங்க ரணில் விக்ரமசிங்க இணங்கியதாகக் கூறப்படுகிறது.
2014 மைத்திரிபால சிறிசேன போன்று இறுதி நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அதுவரையில் விமல் வீரவன்ச அரசாங்கத்திற்குள் இருந்து தனக்கு ஆதரவாக அணிசேர்க்கும் வேலையில் ஈடுபட வேண்டும் என இரு தரப்பு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவிற்கு பின் பிரதமர் பதவியையும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பின் ஜனாதிபதி பதவியையும் விமல் வீரவன்ச எதிர்பார்த்து இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்றுள்ள நிலைமையில் அவரால் மொட்டு கூட்டணிக்குள் அந்த இடத்திற்குச் செல்ல முடியாது. அதனால் முன்கூட்டியே பிக்கு ஒருவர் தலைமையில் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கப்பட்டுள்ளது.
9 மாதங்களாக வெற்றிடமாக இருந்த தேசிய பட்டியல் இடத்திற்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயர் முன்மொழியப்பட்டதை திடீரென நடத்த சம்பவமாக கருத முடியாது. இதன் பின்னணியில் ஏதோ ஒரு ஏற்பாடு உள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ரங்கே பண்டாரவும் அதனையே சூட்சமமாக இன்றைய ஒன்று எதிர்காலத்தில் 60ஆக மாறும் என்றார்.