சர்வதேச அளவில் இந்தியா சாதனை: ஒரே நாளில் 84 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டது!
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 84 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத சாதனையாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது.
இந்தியாவில் கொரொனா 2வது அலை கடந்த மூன்று மாதங்களாக கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அதன் தாக்கம் சற்று குறையத் தொடங்கியது. அதேவேளையில், மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துகொள்வதற்கு தடுப்பூசிசெலுத்துவது மட்டுமே தீர்வு என்பதால் பொதுமக்களும் தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்துக்கொள்கின்றனர்.
இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அண்மையில் அறிவித்தார். இதற்காக, மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை பெற்று மத்திய அரசே மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரம் அடைந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 84.07 லட்சம் தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் 43 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதே இந்தியாவில் அதிகபட்சமாக இருந்தது. தற்போது 84 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தியதன் மூலம் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உலகில் எந்த நாடுகளும் இந்த அளவு அதிக தடுப்பூசியை ஒரே நாளில் செலுத்தியதில்லை. 68 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டதன் பலனாக இத்தனை எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நியூசிலாந்து நாட்டு மக்களின் ஜனத்தொகையைவிட 2 மடங்குக்கும் அதிகமான தடுப்பூசியை இந்தியா ஒரே நாளில் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 18-44 வயதுடையவர்களுக்கு 55 லட்சம் தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளது.
இது மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியின் காரணமாக இந்த மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் 84 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதில் பாஜக ஆளும் மாநிலங்களின் பங்கு என்பது 70 சதவீதமாக உள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இது அளித்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.