கொரோனாவால் உறவினர்களை இழந்தோரின் கண்ணீரை பிரதமர் தன் கண்ணீரால் துடைக்க முடியாது: ராகுல் காந்தி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து வெள்ளையறிக்கையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது பிரதமரின் கண்ணீர் கொரோனாவால் இறந்தவர்களை காப்பாற்றாது, ஆக்சிஜன் காப்பாற்றி இருக்கும் எனக் கூறினார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாக பேட்டியளித்தார். அப்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து வெள்ளையறிக்கையை அவர் வெளியிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
கொரோனா 1 மற்றும் 2-வது அலையில் நாட்டில் பேரழிவு ஏற்பட்டது. இது அனைவருக்கும் தெரியும். இதற்கான காரணத்தை நாம் கண்டறிய வேண்டும். வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவதால், 3-வது அலையை தொடர்ந்து மேலும் பல அலைகள் வரும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நானும் இதைத் தான் கூறுகிறேன்.
எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். மத்திய அரசை குறை சொல்வதற்காக இந்த வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை. கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவதற்காகவே வெளியிட்டுள்ளோம்.
கொரோனா இரண்டாவது அலை வீசியபோது பிரதமர் மோடி அதில் கவனம் செலுத்தாமல் மேற்கு வங்க தேர்தலில் கவனம் செலுத்தினார். கொரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் மற்றும் மருத்துவ சேவை கிடைக்காமல் பலர் உயிரிழந்தனர்.
பிரதமரின் கண்ணீர் கரோனாவால் இறந்தவர்களை காப்பாற்றாது, ஆக்சிஜன் காப்பாற்றி இருக்கும். கரோனாவால் உறவினர்களை இழந்தோரின் கண்ணீரை பிரதமரின் கண்ணீர் மட்டும் துடைக்காது.
தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். தடுப்பூசி போடும் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். 3-வது அலையை எதிர்கொள்ள அரசு தயாராக வேண்டும். மருத்துவமனைகள், ஆக்சிஜன் படுக்கைகளை தயார்படுத்த வேண்டும்.