நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பார்களா முஸ்லிம் எம்பிக்கள்?
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது எத்தகையை முடிவை எடுப்பது என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன பங்காளிக் கட்சிகளாக அங்கம் வகிக்கின்றன. எனினும், 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஹக்கீம், ரிஷாத்தைத் தவிர மேற்படி கட்சிகளின் முஸ்லிம் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு உட்பட 10 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சமர்ப்பித்துள்ளது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தீர்மானித்துள்ளன.
எனினும், அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எத்தகைய முடிவை எடுப்பார்கள் என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
சிலவேளை எதிர்த்து வாக்களிக்காவிட்டாலும்கூட நடுநிலை வகிக்கக்கூடும் என தெரியவருகின்றது.
கம்மன்பிலவின் கட்சியில் முஸ்லிம் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருபவர்கள் இருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருவதால் அவருக்கு எதிரான பிரேரணையை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களிக்கக் கூடும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர்.