ஆட்சியை இப்போது கவிழ்க்க ஒத்துழைப்பு வழங்கமாட்டேன்! – சம்பிக்க திட்டவட்டம்.
“நான் பதவி, பட்டங்களுக்கு ஆசைப்படும் அரசியல்வாதி அல்லன். பிரபாகரனைத் தோற்கடித்தமை உட்பட பல அரசியல் புரட்சிகளில் ஈடுபட்டுள்ளேன். எதிர்காலத்திலும் ஈடுபடுவேன். தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி மாற்றத்துக்கான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டேன்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் பதவியை நான் கேட்பதாக ஒரு கட்டத்திலும், அதன்பின்னர் கூட்டணிக்குள் நான் சூழ்ச்சி செய்வதாக இன்னொரு கட்டத்திலும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல பிரதமர் வேட்பாளர் பதவியைக் கோருவதாகவும் தகவல் பரப்பட்டது. ஒரு விடயத்தை நான் இங்கு தெளிவாகக் குறிப்பிட்டாக வேண்டும். பதவி, பட்டங்களுக்காகச் செயற்படும் அரசியல்வாதி நான் கிடையாது. எனது சுயமுயற்சியாலேயே அரசியலில் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். மாறாக எனது பெற்றோரைக் காண்பித்தோ அல்லது அரசியல்வாதிகளின் முதுகில் தொங்கியோ இங்கு வரவில்லை.
நாம் அரசியலுக்கு வந்து, இந்த நாட்டில் செய்ய முடியாமல் இருந்த பல அரசியல் மாற்றங்களை – புரட்சியை ஏற்படுத்தியுள்ளோம். குறிப்பாக பிரபாகரனைத் தோற்கடித்தமை உள்ளிட்ட விடயமும் இதில் அடங்கும். எனவே, எதிர்காலத்திலும் நாம் அவ்வாறு செயற்படுவோம். அதிகாரம் தொடர்பில் எமக்குக் கவலை கிடையாது.
மக்கள் ஆசியுடன் அவர்களின் விருப்பத்துக்கமைய கிடைப்பதே அரசியல் வரம். அதுவே பலமாகும். மக்களைச் சரியான திசையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குவோம். மக்களும் தற்போது மாற்றம் குறித்து சிந்தித்துள்ளனர். அரசு மீதான நம்பிக்கையும் இல்லாதுபோயுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி மாற்றத்துக்கான ஒத்துழைப்பை நான் வழங்கமாட்டேன். ஏனெனில் ஆட்சியைப் பொறுப்பேற்று, நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு நாட்டின் நிலைமை தற்போது காணப்படுகின்றது. கட்சி தாவல்கள் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது. எனவே, மக்கள் மத்தியில் கருத்தொருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்” – என்றார்.