நிதியைக் காட்டி அதிகாரங்களைப் பறிக்க முடியாது; பணயம் வைக்க முயல்கின்றார் சுகாதார அமைச்சர்!
“மாகாண சபை வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தினால் மாத்திரமே நிதி வழங்குவோம் என்ற மிரட்டல் மூலம் மாகாண சபை அதிகாரங்களைப் பணயம் வைக்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முயல்கின்றார்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“பாராளுமன்ற உரையிலே மாகாண சபை வைத்தியசாலைகளைக் கையகப்படுத்த மாட்டோம்; ஆனால் நிதியும் ஒதுக்கமாட்டோம் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர் மாகாண சபை வைத்தியசாலைகளை மத்திய அரசு கையகப்படுத்தினால் மாத்திரமே நிதி வழங்குவோம் என்ற மிரட்டல் மூலம் மாகாண சபை அதிகாரங்களைப் பணயம் வைக்க முயல்கின்றார். இது ஒரு அரசியல் குற்றம் என்பதை அவர் உணரத் தவறி இருக்கின்றார்.
அமைச்சரின் கூற்று தற்போது அரசின் சர்வாதிகாரப் போக்கை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
அரசியல் சாசனத்தின் ஊடாகவும் மாகாண சபை சட்டத்தின் மூலமாகவும் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் மாகாண சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட வைத்தியசாலைகள், மத்திய அரசால் கையகப்படுத்துவது அரசியல் யாப்பை மீறும் செயலாகும். மாகாண சபையின் ஒப்புதலுடன்தான் இதை நடைமுறைப்படுத்த முடியும்.
மாறாக மாகாண சபைகள் இயங்கு நிலையில் இல்லாத சூழலில் கையகப்படுத்துவது தவறானதாகும். மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மக்களின் உரிமை என்பதையும், மத்திய அரசின் திறைசேரி நிதியும் மக்கள் வரிப்பணத்தில் பெறப்பட்டதால் மக்களுக்கே உரித்தானது என்பதையும் அமைச்சர் மறந்துவிட்டார். நிதி ஒதுக்கீடு என்பதும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் அடிப்படையில்தான் என்பதையும் மாகாண சபைக்குரிய வைத்தியசாலைகளால் பயனடைவது திறைசேரிக்கு வரி செலுத்தும் மக்களே என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
ஆகவே, நிதி ஒதுக்கீடு என்பது பயனாளிகளின் நலன் கருதி இருக்க வேண்டுமே தவிர அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு மிரட்டுகின்ற அல்லது பணயம் வைக்க கையாளுவது அரசியல் குற்றம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மாகாண சபையின் அதிகாரத்துக்குள் வைத்தியசாலைகள் இயங்கும்போது கூட மத்திய அரசால் நிதி ஒதுக்கி அவற்றின் தரத்தை உயர்த்த முடியும். அப்படி பல வைத்தியசாலைகள் சிறந்த முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அபிவிருத்தி அடைந்த நிலையில் பல மாகாணங்களில் காணப்படுவதையும் அமைச்சர் கருத்தில்கொள்ள வேண்டும்.
அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 46/1இல் குறிப்பிடப்பட்ட சரத்துக்களின் பிரகாரம் அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டு அவைகளின் நிர்வாகம் சிறந்த முறையில் இயங்குவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீறும் செயலாக இதை நோக்குகின்றோம்.
மாகாண சபைகளின் நிர்வாகத்தைக் குழப்பும் முகமாக அல்லது மிரட்டு முகமாக அமைச்சர் தெரிவித்த கூற்றை மக்களின் அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதி ஐ.நா. மனித உரிமைப் சபையில் ஆவணப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுப்போம்” – என்றுள்ளது.