இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்து எந்தெந்த நாடுகளில் டிரைவிங் செய்ய முடியும் தெரியுமா?
உள்நாட்டில் டிரைவிங் என்பது சரியான நேரத்தில் வேலைக்கு செல்லவும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை அழைத்து கொண்டு வெளியே செல்லவும் பயன்படுகிறது. அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்தியாவை போன்றே நம்மால் டிரைவிங் செய்ய முடிந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும். நாம் சென்றுள்ள நாட்டின் இயற்கை அழகு, தெருக்கள், சாலையோர கடைகள் மற்றும் மார்க்கெட்கள் உள்ளிட்ட பலவற்றை தவறவிடாமல் பார்க்கும் வாய்ப்பை அளிக்கும். வெளிநாடுகளில் உங்களால் டிரைவிங் செய்ய முடிந்தால் அந்த பயணத்தின் முழுகட்டுப்பாட்டையும் உங்களுக்கு வழங்கும்.
மேலும் அந்நாட்டில் இருக்கும் உள்ளூர் மற்றும் பொது போக்குவரத்தை சார்ந்து இருப்பதை தவிர்க்க செய்கிறது. குறிப்பாக, விடுமுறையில் இருக்கும் போது, வெளிநாடுகளில் வாகனம் ஓட்டுவது, இயற்கைக்காட்சிகள் மற்றும் நிலப்பரப்புகளின் அழகை அனுபவிக்க மிகவும் உதவும். அதற்காக போகும் நாடுகளில் எல்லாம் டிரைவிங் லைசென்ஸ் எடுத்து கொண்டிருக்க தேவையில்லை. நம்மிடம் இருக்கும் இந்திய டிரைவிங் லைசென்ஸை வைத்தே சில வெளிநாடுகளில் நம்மால் டிரைவிங் செய்ய முடியும். அப்படி இந்திய ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகும் 10 வெளிநாடுகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.
ஜெர்மனி :
ஜெர்மனியில் இந்திய லைசென்ஸை வைத்து கொண்டு 6 மாதங்கள் வரை டிரைவிங் செய்யலாம். இருப்பினும், உங்கள் லைசென்ஸின் ஜெர்மன் அல்லது ஆங்கில நகலை அந்நாட்டு அதிகாரிகள் கேட்கும் போது காண்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
யுனைட்டட் கிங்டம்:
யுனைட்டட் கிங்டமில் இந்தியன் டிரைவிங் லைசென்ஸுடன் ஒரு வருடம் வரை டிரைவிங் செய்யலாம். ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய மூன்று நாடுகளிலும் இந்தியன் டிரைவிங் லைசென்ஸுடன் வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலிய நாட்டில் நீங்கள் இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு டிரைவிங் செய்யலாம். லைசென்ஸ் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். கூடுதலாக இந்தியாவில் இருப்பதை போலவே , ஆஸ்திரேலியாவிலும் இடது கை போக்குவரத்து சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. எனவே சாலையின் இடது பக்கத்தில் வாகனம் ஓட்டுவது அங்கு விதியாக உள்ளது நமக்கு சிறப்பான ஒன்று.
நியூசிலாந்து:
அழகான டிரைவிங் சாலைகள் உள்ள சிறிய பசிபிக் நாடான நியூசிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை தங்கள் சொந்த நாட்டின் லைசென்ஸுடன் அதிகப்பட்சம் ஒரு வருடம் வரை டிரைவிங் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நீங்கள் எந்த வகை வாகனத்திற்கு லைசென்ஸ் எடுத்துள்ளீர்களோ அந்த வாகனங்களை மட்டுமே டிரைவ் செய்ய முடியும்.
சுவிச்சர்லாந்து:
செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்கும் சுற்றுலா பயணிகள் 1 வருடம் வரை இந்நாட்டில் டிரைவிங் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். உங்கள் இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் ஆங்கில நகல் உங்களிடம் இருந்தால், இந்தநாட்டில் லீஸ்டு வாகனங்களை ஓட்டுவது சாத்தியமாகும்.
தென்னாப்பிரிக்கா :
இந்திய டிரைவிங் லைசென்ஸுடன் வாகனங்களை டிரைவ் செய்வது தென்னாப்பிரிக்காவின் அழகான நகரங்கள் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்டறிய உங்களை அனுமதிக்கிறது. செல்லுபடியாக கூடிய லைசென்ஸா, அந்த லைசென்ஸ் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதா, அதில் உங்கள் புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.
ஸ்வீடன்:
ஸ்வீடனில் ஒரு காரை ஓட்ட நீங்கள் பின்வரும் மொழிகளில் ஒன்றில் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்: ஆங்கிலம், ஸ்வீடிஷ், ஜெர்மன், பிரஞ்சு அல்லது நோர்வே(Norwegian). இது உங்கள் சொந்த காரில் நீங்கள் செல்லும் இடத்தை நோக்கி பயணிக்க அனுமதிக்கும்.
சிங்கப்பூர்:
சுற்றுலா பயணிகள் தங்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் டிரைவிங் செய்யலாம். 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் சிங்கப்பூரில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகிறார்கள். உங்கள் டிரைவிங் லைசென்ஸுடன்
நீங்கள் சிங்கப்பூரில் 1 வருடம் வரை வாகனம் ஓட்டலாம்.
ஹாங்காங்:
இந்தியன் டிரைவிங் லைசென்ஸுடன் நீங்கள் ஒரு வருடத்திற்கு ஹாங்காங் நாட்டில் சட்டப்பூர்வமாக காரை ஓட்டலாம்.
மலேசியா:
மலேசிய சாலைகளில் டிரைவிங் செய்வதற்கு உங்கள் இந்தியன் டிரைவிங் லைசென்ஸ் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் இருக்க வேண்டும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் அதைச் சரிபார்த்துள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.