மதனை கைது செய்தவுடனே அதிரடியை தொடங்கிய போலீசார்! இளசுகளுக்கு விடுத்த எச்சரிக்கை
யூடியூப் மூலம் ஆபாச பேச்சுகளால் சிறுவர்களை தவறாக வழிநடத்திய குற்றச்சாட்டில் மதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து மதனால் ஏமாறியவர்கள் புகார் கொடுக்கலாம் எனவும் போலீசார் அறிவித்திருந்தனர்.
இதன்படி ஏராளமான புகார்கள் குவிந்ததால், அதிரடி நடவடிக்கையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
மிக முக்கியமாக மதனின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை சென்னை சைபர்கிரைம் போலீசார் முடக்கினர்.
மேலும் மதனின் முடக்கப்பட்ட யூடியூப் மற்றும் இன்ஸ்டா பக்கங்கள் மூலம் சைபர்கிரைம் போலீசார் முக்கிய அறிவிப்பு ஒன்றை அவரது ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில், “மதனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருக்கும் எல்லோருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
பப்ஜி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. பப்ஜி விளையாட்டு மூலம் ஆபாச வார்த்தைகளை பேசி சமூக வலைதளத்தில் பரப்பி வருபவர்களை கண்காணித்து வருகிறோம். எல்லோருடைய மெசேஜையும் படித்து வருகிறோம்.
தடை செய்யப்பட்டுள்ள பப்ஜி விளையாடுபவர்களை கண்டறிந்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க உள்ளோம்.
தடையை மீறி விளையாடுபவர்களின் இல்ல முகவரிக்கு கடிதம் அனுப்ப உள்ளோம். எல்லோரையும் கண்காணித்து வருகிறோம். கவனமாக இருங்கள். மதன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.