கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்; மதுரையில் தனியார் மருத்துவமனை அனுமதி ரத்து!
மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனை அனுமதியை ரத்து செய்த மாவட்ட சுகாதாரத்துறை, இனிமேல் கொரோனா சிகிச்சை அளித்தால் சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மதுரை அண்ணாநகர் பகுதியில் இயங்கி வரும் ரக் ஷா என்ற தனியார் மருத்துவமனையில், பல்கீஸ் பேகம் என்ற 39 வயது பெண் கடந்த மே 14 முதல் 19 வரை சிகிச்சை பெற்றுள்ளார். அவரிடம் சிகிச்சைக்கான தொகையாக 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வசூலித்து உள்ளனர்.
தனியார் மருத்துவமனைகள் கொரோனா சகிச்சைக்கு 91 ஆயிரத்து 410 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த மருத்துவமனை பல மடங்கு கட்டணம் வசூலித்து உள்ளது குறித்து மாவட்ட சுகாதாரத்துறைக்கு புகார் கிடைத்துள்ளது.
அதனை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், கூடுதலாக வசூலித்த 2 லட்சத்து 48 ஆயிரத்து 510 ரூபாயை நோயாளிக்கு திரும்ப அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளனர். அதனை பின்பற்றாத காரணத்தால் அந்த மருத்துவமனை இனி கொரோனா சிகிச்சை மேற்கொள்ள கூடாது என மாவட்ட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜூன் 23 முதல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடாது எனவும், ஏற்கனவே சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
மேலும், இதனை மீறும் பட்சத்தில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல, மேலும் 9 தனியார் மருத்துவமனைகளும் கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் அந்த மருத்துவமனைகள் மீது விசாரணை நடத்திய நிலையில், கூடுதலாக பெற்ற கட்டணத்தை அவை திரும்ப அளித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.