என்ன இதிலும் போலியா? கொல்கத்தா மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய செய்தி
கொல்கத்தாவில் உள்ள சிட்டி கல்லூரி வளாகத்தில் கடந்த 18-ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடந்துள்ளது. அதிலும், அங்கு ரஷ்யாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்புட்னிக் மருந்து செலுத்தப்படுவதாக தகவல் பரவியது.
பலரும் அங்குச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனால், சிலருக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு பல்வேறு உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட்டன. ஆனால் இதெல்லாம் பொதுவானதுதான் என்று எண்ணிக் கொண்டிருந்தனர்.
ஆனால், அந்த முகாமை நடத்திய நபரை, போலி கரோனா தடுப்பூசி முகாம் நடத்தியதாகக் கூறி காவல்துறையினர் கைது செய்த போதுதான், அங்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கலக்கம் அடைந்தனர்.
இது குறித்து விசாரணை நடததிய சுகாதாரத் துறையினர், அந்த முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்னை ஏற்பட்டால், மருத்துவ உதவி அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
சிலருக்கு தலைவலி, உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டுள்ளது. சிலருக்கு எந்த மாறுபாடும் தெரியவில்லை. இந்த நிலையில், தங்களுக்கு தடுப்பூசி என்று செலுத்தியது என்ன திரவம் என்பது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
போலியான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மனநிலை பலவாறு உள்ளது. தற்போது தங்களது உடல்நலப் பாதிப்புகள் எப்போது சீரடையும் என்பதும், அடுத்து நாங்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது எப்போது என்றும், இந்த முகாமில் போலியான தடுப்பூசியை செலுத்திக் கொண்ட முதியவர்களின் நிலை என்ன என்பது குறித்தும் பல கவலைகள் எழுந்துள்ளன.