முதல்வர் மு.க.ஸ்டாலின் , விஜயகுமாரை (ஐ.பி.எஸ்) சந்திக்க விரும்பியது ஏன்?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி விசிட்டின்போது தமிழக கேடர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பின்போது இந்திய உள்துறை அமைச்சகத்தின் சீனியர் செக்யூரிட்டி அட்வைஸர் விஜயகுமார் ஐ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை. அதனால், விஜயகுமார் ஏன் வரவில்லை என்று முதல்வர் தரப்பிலிருந்து விசாரிக்கப்பட்டதாம்.
ஏற்கெனவே ஒப்புக்கொண்ட புரோகிராம்படி, அன்றைய தினம் விஜயகுமார் சென்னையில் இருந்தார். கோவையிலிருந்த அவருடைய தாயாரை நேரில் சந்திக்கச் சென்றுவிட்டு, அப்படியே டெல்லிக்குப் பயணமானார். விஜயகுமாரை முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்த்ததற்கு முக்கியமான காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்.
2004-ல் சந்தனக் கடத்தல் வீரப்பனை விஜயகுமார் டீம் சுட்டு வீழ்த்திய பிறகு அந்தத் தகவலை முதலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மற்ற சில வி.வி.ஐ.பி- களுக்கும் தெரிவித்தார் விஜயகுமார். அவர்களில், அப்போதைய எதிர்கட்சித் தலைவர் கருணாநிதியும் ஒருவர்.
அப்போது அதைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா டென்ஷன் ஆனார். ‘இவர் ஏன் கருணாநிதியிடம் சொன்னார்?’ என்று கோபப்பட்டதோடு, அப்போதைய உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத்திடம் சொல்லி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கும் விஜயகுமாருக்கும் இடையே பனிப்போர் உருவானது. அதையடுத்து, விஜயகுமார் மத்திய அரசுப் பணிக்காக டெல்லி சென்றுவிட்டார். பல்வேறு பதவிகளை வகித்துவிட்டு ஒய்வுபெற்றார். வீரப்பன் கொல்லப்பட்ட விவகாரத்தை கருணாநிதியிடம் சொன்னதாலேயே, விஜயகுமாருக்கு தர்மசங்கடம் ஏற்பட்ட தகவல், மு.க.ஸ்டாலினுக்கு அப்போதே தெரியும். அதனால்தான், மு.க.ஸ்டாலின், விஜயகுமாரை டெல்லியில் சந்திக்க விரும்பினாராம். ஆனால், முடியாமல் போனது.
விரைவில் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, சென்னையில் முதல்வரைச் சந்திக்க விஜயகுமார் வருவார் என்று அவர் தரப்பிலிருந்து முதல்வரின் செயலாளருக்குத் தகவல் சொல்லப்பட்டதாம்.