என்னென்ன அதிரடிகள் காத்திருக்கோ: நிர்வாகிகளுடன் கமல் இன்று ஆலோசனை!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. எனினும், அனைத்து இடங்களில் அக்கட்சி தோல்வியடைந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர், கமலில் நடவடிக்கைகள் மீது அதிருப்தி அடைந்து, மகேந்திரன் உள்ளிட்ட பலரும் மக்கள் நீதி மய்யத்தின் இருந்து விலகினர்.
அதன் பின்னர் எந்த பொது நிகழ்விலும் கலந்துகொள்ளாத கமல்ஹாசன், ஆன்லைன் வழியாக தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தார். முக்கிய நபர்கள் விலகிய நிலையில், புதிதாக நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து நிர்வாகிகளிடம் கமல் ஆலோசனை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். காணொலிக் காட்சி வழியாக இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த தேர்தலுக்கு தயாராவது பற்றியும் ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.