டெல்டா வேரியண்ட் மூளையை பாதிக்கும்: முன்னாள் ஐசிஎம்ஆர் விஞ்ஞானி பகீர் தகவல்!!
டெல்டா வேரியண்ட் கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் என முன்னாள் ஐசிஎம்ஆர் தலைமை விஞ்ஞானியான மருத்துவர் கங்காகேத்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது உருமாறிய கொரோனா வேரியண்ட்கள் அலை அலையாய் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. உருமாறிய கொரோனா தொற்று ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
இதில் டெல்டா என்ற வேரியண்ட் முதல் முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இதுவே இந்தியாவில் 2ம் அலை பரவலுக்கு காரணமாக இருந்தது என கூறுகிறார்கள். தற்போது டெல்டா பிளஸ் என்ற மற்றொரு வேரியண்ட் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் 10 மாநிலங்களில் இந்த டெல்டா பிளஸ் வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய வகை வேரியண்டுக்கு முதல் பலி மதுரையில் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டெல்டா பிளஸ் வேரியண்ட் 3வது அலை பரவலுக்கு வித்திடலாம் என பரவலாக பேசப்படுகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் முன்னாள் தலைமை விஞ்ஞானி மருத்துவர் கங்காகேத்கர் கூறுகையில், கொரோனா வைரஸின் உருமாறிய வேரியண்ட்களான டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகைகள் மிகவும் தொற்றுநோயாகக் கருதப்படுகின்றன எனவும் இது “நரம்பியல் அறிகுறிகளை ஒரு பொதுவான வெளிப்பாடாக” ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கிறார்.
டெல்டா வேரியண்ட் செல்-க்கு-செல் பரிமாறலாம் என்று நான் சொன்னபோது, உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுவதன் அர்த்தம் என்ன? அது மூளைக்குள் சென்றால் என்ன நடக்கும்? இது பொதுவான வெளிப்பாடாக நரம்பியல் அறிகுறிகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகம். புதிய பிறழ்வு, எந்த உறுப்பைப் தாக்குகிறது என்பதை பொறுத்து, இது பெரிய நோய்க்குறியியல் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்” என தெரிவித்தார் கங்காகேத்கர்.
டெல்டா வேரியண்ட் குரித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அத்னோம் கூறுகையில், உலகளவில் தற்போது டெல்டா வேரியண்டை பற்றி நிறைய கவலை உள்ளது என்பதை நான் அறிவேன், மேலும் உலக சுகாதார நிறுவனமும் அதைப் பற்றி கவலை கொண்டுள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்ட வகைகளில் டெல்டா மிகவும் பரவக்கூடியது, குறைந்தது 85 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது, மேலும் அறியப்படாத தடுப்பூசி செலுத்தாத மக்களிடையே வேகமாக பரவி வருகிறது என்றார்.
இதனிடையே டெல்டா பிளஸ் கண்டறியப்பட்ட தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எழுதியுள்ள கடிதத்தில் தேவையான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.