அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிபதி நியமனம்
அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக எம்.நிா்மல்குமாரை நியமித்து உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
மதுரை தல்லாகுளத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் உயா் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளாா். இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்தேன். புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாா் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. அதில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாா் மீது பூா்வாங்க விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே அவா் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் மாறுபட்ட தீா்ப்பினை கடந்த மாா்ச் மாதம் 4-ஆம் தேதி வழங்கினா். நீதிபதி எம்.சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகாா் குறித்து அமைச்சா் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
மற்றொரு நீதிபதியான ஆா்.ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பின்னா் வழக்குப் பதிவு செய்து விசாரிப்பது இறந்த
குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போன்றது. எனவே, இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிப்பதால் எந்தவிதமான பலனும் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா். நீதிபதிகளின் மாறுபட்ட தீா்ப்பினால், இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதன்படி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக நீதிபதி எம்.நிா்மல்குமாரை நியமித்து தலைமை நீதிபதி சஞ்சீவி பானா்ஜி உத்தரவிட்டாா். இதனையடுத்து வழக்கு நீதிபதி எம். நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த
நீதிபதி, இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை அனைத்து தரப்பினரும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.