30 நாட்களில் 385 உடல்களை அடக்கம் செய்த இஸ்லாமியர்!
இந்தியாவில் இஸ்லாமியர் ஒருவர் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின்போது, 30 நாட்களில் 385 உடல்களுக்கு கண்ணியமான இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பரேலியை (Mohammed Ghizaal Siddiqui) சேர்ந்த முகமது கிசால் சித்திக் எனும் இஸ்லாமிய மனிதர், ஆதரவற்ற இறந்த உடல்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து மிகப்பெரிய சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அவர், கடந்த 38 ஆண்டுகளாக இதுவரை சுமார் 7,000 உடல்களை இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளார்.
இந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வெடித்தபோது, ஏப்ரல் 12 -ஆம் திகதி தொடங்கி அடுத்த 30 நாட்களில் 385 உடல்களுக்கு கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகளை செய்துள்ளார்.
அதில், சுமார் 345 உடல்களை அடக்கம் செய்துள்ளார். சுமார் 40 உடல்களை தகனம் செய்ததாக கிசால் சித்திக் கூறுகிறார்.
ரம்ஜான் பண்டிகை நேரத்தில் ஒவ்வொரு நாளும் தனக்கு 20 முதல் 30 அழைப்புகள் வரும் என கூறுகிறார்.
கொரோனாவால் “குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமையில் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழ்நிலைகள் இருந்தன. சில சூழ்நிலைகளில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். பெரும்பாலான நிகழ்வுகளில், எந்தவொரு குடும்ப உறுப்பினரும் இறுதி சடங்குகளைச் செய்ய முன்வரவில்லை, ”என்கிறார் சித்திக்.
தனது வாழ்க்கையில் மீண்டும் இதுபோன்ற கொடூரமான ஒன்றை பார்க்க கூடாது என அல்லாஹ்விடம் வேண்டிக்கொண்டதாக கூறும் அவர், இந்து, முஸ்லிம் என எந்த எந்த வேறுபாடும் இல்லாமல் தனது பணியை செய்துவருகிறார்.
சித்திக்கின் இந்த சமூக பணிக்கு அவரது குடும்பத்தினரும் ஆதரவாக உள்ளனர்.
இரண்டாவது அலையின்போது, தன்னால் குடுபத்துக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக வேறு வீட்டில் தனியாக தங்கியிருக்க முடிவு செய்தார். ஆனால் அவரது மனைவி அவருடன் வந்துவிட்டார். தனது கணவர் “மனிதகுலத்திற்கு சேவை செய்வதால் எங்களுக்கு எதுவும் நடக்காது” என்று அவர் கூறினார்.