நாடு முடங்கக்கூடும்! – இராணுவத் தளபதி முன்னறிவிப்பு.

“நாட்டில் பதிவாகும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று மற்றும் இறப்பு நிலைவரங்களின் அடிப்படையில் எந்த நேரத்திலும் நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
நாட்டில் இனிமேல் முழுமையான பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, நிகழ்வுகள், திருவிழாக்கள் மற்றும் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடத்த அனுமதி இல்லை எனவும் அவர் கூறினார்.
சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிக்கு அழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.