இங்கிலாந்துடனான தொடர் இருபது 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராவதற்கு உதவும்.
ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணப் போட்டிக்கு தங்களைத் தயார்படுத்துவதற்கு இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் பெரிதும் உதவும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார் .
இங்கிலாந்தை பாகிஸ்தான் அணி சென்றடைந்து டார்பியில் 3 நாள் தனிமைப்படுத்தலை ஆரம்பிக்கத் தயாரானபோது பாபர் அஸாம் இதனைத் தெரிவித்தார் .
இங்கிலாந்தை சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்றுநர் குழாம் உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை எதிர்மறையாக இருந்ததாக அறிவிக்கப்படுகின்றது .
இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி , தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்தபின்னர் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பிக்கும் .
டார்பியில் 6 நாள் பயிற்சியில் ஈடுபடும் பாகிஸ்தான் அணியினர் அதன் எனர் கார்டிவ் பயணமாகி அங்கு ஜூலை 8 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்தாடும் .
இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கான விஜயங்களின்போது தமது அணி திறமையாக விளையாடியதை நினைவுபடுத்திய பாபர் அஸாம் , அதற்காக இங்கிலாந்தை இலகுவாக கருதிவிடக்கூடாது என தனது அணியினருக்கு எச்சரித்துள்ளார் . ‘ இங்கிலாந்து அணியினரை அவர்களது சொந்த மண்ணில் இலகுவாக கருதமுடியாது .
எவ்வாறாயினும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இருபது 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராவதற்கான தொடராக அமையும் ‘ என பாபர் அஸாம் குறிப்பிட்டார் .
சுகாதார பாதுகாப்பு குமிழிக்குள் இருப்பது என்பது சிரமமான காரியம் எனக் குறிப்பிட்ட அவர் , அதற்கு எல்லோரும் பழக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார் .
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பது எனக்கு பெருமை தருகின்றது .
எனக்காக நான் நிர்ணயித்துக்கொண்டுள்ள இலக்குகளை அடைந்தவண்ணம் உள்ளேன் எனவும் பாபர் அஸாம் கூறினார் .