கோவையில் பழங்குடியின குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி பெண் – மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்து
கோவை சின்னாம்பதி பழங்குடி கிராமத்தில் சிறுவர் சிறுமியருக்கு பாடம் நடத்தி வரும் பழங்குடியின பெண் சந்தியாவை , கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் சந்தித்து புத்தகங்கள் கொடுத்து வாழ்த்தினார்.
தமிழக – கேரள எல்லையான வாளையாறு அருகே அமைந்துள்ளது சின்னாம்பதி பழங்குடி கிராமம். கோவை மாவட்டத்தினையொட்டி இருக்கும் தமிழக எல்லையில் உள்ள கடைசி பழங்குடி கிராமமான சின்னாம்பதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் சந்தியா.இவர் இந்த பழங்குடி கிராமத்தின் முதல் பட்டதாரி பெண். க.க.சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்.சி.ஏ படிப்பை முடித்த அவர் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார்.
கொரொனா இரண்டாம் அலை காரணமாக வேலை பார்க்கும் நிறுவனம் விடுமுறை விடப்பட்டதால், வீட்டில் இருக்கும் சந்தியா, பழங்குடி குழந்தைகளுக்கு தினமும் பாடம் நடத்தி வருகின்றார். ஏற்கனவே முதல் அலையின் போது வேலை பார்க்கும் நிறுவனம் விடுமுறை அளித்த போதும்,சந்தியா சின்னாம்பதி பழங்குடி கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
இந்நிலையில் பழங்குடி கிராமத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பழங்குடி குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருவதை அறித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் , நேற்று வாளையாறு பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற போது, பழங்குடி பெண் சந்தியாவை நேரில் பார்த்து பாராட்டினார். மேலும் அவருக்கு புத்தகங்களையும் பரிசாக கொடுத்த மாவட்ட ஆட்சியர் சமீரன் , சந்தியாவை ஊக்கப்படுத்தினார்.
பழங்குடி கிராமங்களில் பெண்களை படிக்க வைப்பதே அரிதான ஒன்றாக இருக்கும் நிலையில், தான் பெற்ற கல்வி பிற பழங்குடி குழந்தைகளுக்கும் கிடைத்திடும் வகையில் பழங்குடி பட்டதாரி பெண் சந்தியாவின் முயற்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தது பழங்குடி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. மேலும் தங்கள் குழந்தைகளை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், தனது செயல்பாடுகள் மூலம் பழங்குடி மக்களின் மனதில் விதைத்து சென்றுள்ளார் மாவட்ட ஆட்சியர் சமீரன்.