குடியரசு தலைவர் வருகைக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து… மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் பெண் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை அன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடும்பத்துடன் ரயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தில் இருந்து குடியரசுத் தலைவர் காரில் கிராமத்துக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அந்நேரத்தில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வந்தனா மிஸ்ரா என்ற 50 வயது பெண்மணியின் வாகனமும், சாலையின் நடுவிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கேயே அவர் உயிருக்கு போராடி துடித்துள்ளார். நீண்ட நேரத்துக்கு பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கிருந்த மருத்துவர்கள் வந்தனா மிஸ்ரா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சரியான நேரத்துக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக பேசிய வந்தனா மிஸ்ராவின் கணவர் சரத் மிஸ்ரா, கோவிந்த்புரி மேம்பாலத்தில் தாங்கள் நிறுத்தப்பட்டதாகவும், காவலர்களிடம் மருத்துவ அவசரம் என்று பலமுறை எடுத்துரைத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், வந்தனாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, போலீசாரையும் நேரில் சென்று இரங்கல் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து நடந்த சம்பவத்துக்கு, கான்பூர் மாவட்ட காவல் ஆணையர் அசீம் அருண் மன்னிப்பு கோரியுள்ளனர்.
மேலும் நீண்ட நேரம் பொதுமக்களின் போக்குவரத்தை முடக்கியற்காக, காவல் உதவி ஆய்வாளர் சுஷில்குமார் மற்றும் 3 காவலர்கள் என மொத்தம் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அசீம் அருண் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவம் காவல்துறையினருக்கு ஒரு பாடம் என்று தெரிவித்துள்ள ஆணையர், வருங்காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்காத வகையில் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.