உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வைத்த கோரிக்கை!
வழக்கறிஞர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் தொடக்கவிழா நிகழ்வில், நீதிபதிகளிடம் எம்.எல். ஏ உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர்களிடம் நீதிபதியும் பரஸ்பரம் கோரிக்கை விடுத்துக்கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில், தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்க விழா நடந்தது. இம்முகாமினை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஸ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில்,”கொரோனா காலத்தில் தொற்றை கட்டுப்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமை. தமிழ்நாட்டில் இரண்டு டோஸ், அதாவது 11 கோடி தடுப்பூசிகள் செலுத்தவேண்டியுள்ளது. தற்போது வரை 1.41 கோடி தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.”
“எனவே, ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை பெற்றுத்தர வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
அதே மேடையில், கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ள வழக்கறிஞர்களுக்கும், பாதிப்படைந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கும் அரசு உதவ வேண்டும் என்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபுவிடம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கோரிக்கை விடுத்தார்.