காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்திய வரைபடத்தில் இருந்து தூக்கிய ட்விட்டர் – நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகளை வேறு நாடாக காட்டி புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம். மத்திய அரசுடன் ஏற்கனவே மோதல் போக்கில் இருந்து வரும் ட்விட்டர் நிறுவனத்தின் இந்த செயல்பாடு சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வரைபடத்தை தவறாக காட்டுவது ட்விட்டர் நிறுவனத்துக்கு இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் யூனியன் பிரதேசமான லடாக்கை சீனாவின் பகுதியாக ட்விட்டர் மேப் காட்டியது. இதனையடுத்து அக்டோபர் 22ம் தேதி ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியான ஜேக் டார்ஸிக்கு மத்திய அரசு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. இதற்காக உங்கள் நிறுவனம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என குறிப்பிட்டு விளக்கம் கோரியது மத்திய அரசு. அதன் பின்னர் ட்விட்டர் தனது தவறை திருத்திக் கொண்டதால் இந்த சர்ச்சை முடிவுற்றது.
தற்போது மீண்டும் அதே போன்றதொரு செயலில் ட்விட்டர் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை தன்னுடைய மேப்பில் தனி நாடாக காட்டியுள்ளது ட்விட்டர். அந்நிறுவனத்தின் கேரியர்ஸ் பகுதியில் Tweep Life என்ற பேஜின் கீழ் இந்தியாவின் தவறான மேப் காட்டப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் இந்த செயல் சமுக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்கள் பலரும் ட்விட்டருக்கு எதிராக கமெண்டுகளில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழில்நுட்ப விதிகளுக்கு உடன்படாமல் மத்திய அரசுக்கு எதிராக மோதல் போக்கை ட்விட்டர் கையாண்டது. பின்னர் மத்திய அமைசர்களின் கணக்குகளை முடக்குவது, நீல நிற டிக்கை நீக்குவது போன்ற செயல்களில் இறங்கி மத்திய அரசின் எதிர்ப்பையும் அந்நிறுவனம் பெற்றது.
காஷ்மீர், லடாக் பகுதிகளால் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இந்தியாவுக்கு ஏற்கனவே தகராறு இருந்து வரும் நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடு மத்திய அரசு வட்டாரத்திலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ட்விட்டர் மீது என்ன மாதிரியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க இருக்கிறது என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.